ஆசிரியர்கள் குற்றப்பின்னணி குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்! உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: ஆசிரியர்கள் குற்றப்பின்னணி குறித்து காவல்துறையினரைக் கொண்டு விசாரணை நடத்தும் வகையில், விரைவில்  உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு உறுதி அளித்துள்ளது.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் ஆசிரியர்கள், பணிக்கு வராமல், தங்களுக்கு பதிலாக, அந்த பகுதியில் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் மற்றும் இளைஞிகளை சில ஆயிரங்கள் கொடுத்து குறைந்த ஊதியத்தில் சட்டத்துக்கு புறம்பாக பணியமர்த்தி, மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகின்றனர். இதுபோன்ற சட்டமீறல்கள் குறித்து அவ்வப்போது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

சமீபத்தில்,   கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை இழைத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூரிய பிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்து வரும் , நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார் மற்றும் பி.பி.பாலாஜி அமர்வில் இன்றைய விசாரணையின்போது,  ஏற்கனவே நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, அரசுத் தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

அப்போது, நீதிமன்றத்தில்,  கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரின் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.அட்வகேட் ஜெனரல், ஆசிரியர்களின் குற்றப் பின்னணி குறித்து காவல் துறையினர் மூலம் விசாரணை நடத்துவது குறித்த உயர் நீதிமன்றம் தெரிவித்த யோசனை தொடர்பாக விரைவில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து, அது சம்பந்தமான உத்தரவுகளை அடுத்த விசாரணையின் போது தாக்கல் செய்யக் கூறிய நீதிபதிகள், கிருஷ்ணகிரி போலி என்சிசி முகாம் குறித்த விவகாரம் தொடர்பாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு புதிய தலைவர் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.