லாகூர்: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னால், இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, தற்போது முதல்முறையாக இலங்கை அணி பாகிஸ்தானில் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக, லாகூரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பயணம் செய்த பேருந்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அந்த சம்பவத்தையடுத்து பாகிஸ்தானில் எந்த பெரிய கிரிக்கெட் அணியும் சுற்றுப்பயணம் செய்வதை தவிர்த்து வந்தன.

கடந்த 2017ம் ஆண்டு இலங்கை அணி மீண்டும் பாகிஸ்தானில் ஒரேயொரு டி-20 போட்டியில் மட்டும் ஆடியது. ஆனாலும், அந்தப் போட்டியை இலங்கை அணியின் பல முன்னணி வீரர்கள் புறக்கணித்தனர். தற்போது இருதரப்பு டெஸ்ட் போட்டி திட்டமிடப்பட்டுள்ளதை அடுத்து, பாகிஸ்தானில் ஆட வருமாறு இலங்கை அணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இலங்கையின் சார்பில் ஒரு ஆய்வுக்குழு பாகிஸ்தானுக்கு சென்று அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து இலங்கை அரசுக்கு அறிக்கை அளித்தது. அந்த அறிக்கை நேர்மறையாக இருக்கவே, இலங்கை அணி ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

ஆனாலும், இதுதொடர்பான எந்த இறுதி முடிவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், மாற்று ஏற்பாடுகள் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் கலந்தாலோசனை செய்த பிறகே, எதுவும் உறுதியாக தெரியவரும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு அனைத்து வீரர்களையும் சம்மதிக்க வைப்பதும் மிகவும் கடினம் என்று இலங்கை தரப்பில் கூறப்படுகிறது.