புதுடெல்லி: பலதரப்பு மக்களின் கோரிக்கையான இயற்கை எரிவாயு & பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டுவர வேண்டுமென்பதற்கு பெட்ரோலிய அமைச்சகம் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2017ம் ஆண்டு நாடு முழுவதும் ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்டது முதல், மத்திய மற்றும் மாநில அரசுகள் விதித்து வந்த 17 மறைமுக வரிகள் ஒன்றிணைக்கப்பட்டன.
இயற்கை எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல், கச்சா எண்ணெய், விமான எரிபொருள் ஆகியவற்றிற்கு வரி விதிப்பதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிக வருமானம் கிடைப்பதால் அவை இதுவரை ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டுவரப்படவில்லை.
இந்நிலையில், பெட்ரோலிய அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது; இயற்கை எரிவாயுவுக்கு மாநிலங்கள் 3 முதல் 20%வரை மதிப்பு கூட்டு வரியும் (வாட்) அத்துடன் கலால் வரியும் விதிக்கின்றன. அதேசமயம், இயற்கை எரிவாயு ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவரப்பட்டால் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்கப்படும்.
இதனையொட்டி பல்வேறு நிறுவனங்கள் முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளது. இயற்கை எரிவாயு, மக்களின் சுகாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விமான எரிபொருளை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர வேண்டுமென மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகமும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.