ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை மூலம் மத்திய கிழக்கு நாடுகளின் அமைதியை அமெரிக்கா சீரழித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்பை பரிந்துரைக்கும் முடிவை பாகிஸ்தான் திரும்பப்பெற வேண்டும் என்றும் அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர்கள் குரலெழுப்பி உள்ளனர்.

2026 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயரைப் பரிந்துரைப்பதற்கான முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தான் அரசியல்வாதிகள் மற்றும் பிரமுகர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலின் போது தீர்க்கமான ராஜதந்திர தலையீட்டிற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை 2026 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைப்பதாக பாகிஸ்தான் நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் டார் கையெழுத்திட்ட பரிந்துரைக் கடிதம் ஏற்கனவே நார்வேயில் உள்ள நோபல் அமைதிப் பரிசுக் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால் அமெரிக்கா ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் அணுசக்தி நிலையங்களை குண்டுவீசித் தாக்கியது. இதன் மூலம், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலில் அது நேரடியாகத் தலையிட்டது.

எனவே, சில முக்கிய அரசியல்வாதிகள், டிரம்பை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதாக டான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூத்த அரசியல்வாதியும், ஜாமியத் உலமா-இ-இஸ்லாம் (JUI-F) தலைவருமான மௌலானா ஃபஸ்லூர் ரெஹ்மான், அரசாங்கம் தனது முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரியுள்ளார்.

டிரம்பின் அமைதி கூற்று பொய்யானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு வழங்குவதைத் திரும்பப் பெற வேண்டும் என்று ஃபசல் கோரியுள்ளார்.

பாலஸ்தீனம், சிரியா, லெபனான் மற்றும் ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களை டிரம்ப் ஆதரித்துள்ளார். இது எப்படி அமைதியின் அடையாளமாக இருக்க முடியும்? ஆப்கானியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்களின் இரத்தக் கறைகளைக் கொண்ட அமெரிக்கா, எப்படி அமைதியை ஆதரிப்பதாகக் கூற முடியும் என்றும் ஃபசல் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைதியை விரும்புபவர் அல்ல, அவர் வேண்டுமென்றே சட்டவிரோதமான போரைத் தொடங்கியுள்ளனர். எனவே, பாகிஸ்தான் அரசாங்கம் அவரது நோபல் பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும் என்று முன்னாள் செனட்டர் முஷாஹித் உசேன் X இல் பதிவிட்டுள்ளார்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை போர் லாபியில் சிக்க வைத்ததன் மூலம் டிரம்ப் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார் என்றும் அவர் கூறினார்.

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) எம்எல்ஏ அலி முகமது கான் தனது X கணக்கில் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பதிவிட்டார்.

அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்பை பரிந்துரைக்கும் முடிவை பாகிஸ்தான் திரும்பப் பெறுமா என்று எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான பாத்திமா பூட்டோ கேள்வி எழுப்பியுள்ளார்.