இந்தியா கூட்டணியின் முதல் கூட்டத்தை பீகாரில் நடத்தி பாஜக-வுக்கு கிலியை ஏற்படுத்தியவர் நிதீஷ் குமார்.
பின்னர் இந்த கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜீன கார்கே தலைவரான நிலையில் ஆரம்பகட்டத்திலேயே கூட்டணியில் இருந்து வெளியேறினார் நிதீஷ் குமார்.
பாஜக-வுடன் மீண்டும் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலைச் சந்தித்த நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் கட்சி மாநில அளவிலும் தேசிய அளவிலும் பாஜக அதிக இடங்களைப்பெற முக்கிய பங்காற்றியுள்ளார்.
பீகாரில் உள்ள மொத்த 40 தொகுதிகளில் கடந்த முறை ஐக்கிய ஜனதாதளம் – பாஜக கூட்டணி 39 இடத்தில் வெற்றிபெற்றது காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டுமே வென்றது.
இம்முறை ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியின் தலைவரும் நிதீஷ்குமாரின் அனைத்து அரசியல் விளையாட்டையும் நன்கு அறிந்தவரான லாலு பிரசாத் யாதவ் ஜாமீனில் வெளிவந்துள்ள நிலையில் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக அரசியல் களத்தில் இயங்கியது பாஜக மற்றும் நிதீஷ் கூட்டணிக்கு சவாலாகவே இருந்தது.
இருந்தபோதும் பீகார் மாநில அரசியலில் கத்துக்குட்டியாகவே இருந்து வரும் பாஜக-வுக்கு நிதீஷ்குமார் என்ற கூட்டணி தலைமையே கரை சேர உதவியது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் 3 இடங்களிலும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் 4 இடங்களிலும் வெற்றி பெற்றதில் இருந்தே பாஜக நிதீஷ் குமார் கையைப் பிடித்து கரை சேர்ந்திருப்பது உறுதியாகிறது.
இங்கு ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாஜக இரண்டும் சமஅளவில் 12 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.
இந்த 12 இடங்களுடன் நிதீஷ்குமாரின் ஆதரவுடனேயே மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கப்போவதாக மோடி கூறியுள்ளார்.
பீகாரில் பெற்ற சமவெற்றியை தேசிய அளவிலும் சம அந்தஸ்து வழங்கி நிதீஷ்குமாரை மோடி அங்கீகரிப்பாரா என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும்.