ஜெய்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மர் மாவட்டம் செயின்புரா கிராமத்தில் கடந்த ஏப்ரல் 24ம் தேதி சிங் என்ற சீ க்கியர் மர்ம கும்பலால் தாக்கப்பட்டார். இந்த வீடியோ சமூக வளைதளங்களில் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவர் எலக்ட்ரானிக் பொருட்களை ரிப்பேர் செய்யும் தொழிலாளி. இவருக்கு நான்கு குழ ந்தைகள் உள்ளனர். இவர் நன்கொடை வசூல் செய்வதற்காக அந்த கிராமத்திற்கு சென்றார்.

இது குறித்து சிங் கூறுகையில், ‘‘ ஹர்பால் மற்றும் குல்தீப் சிங் ஆகியோர் அன்னக்ஷேத்ரா என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்று நடத்தி வருகின்றனர். ஏழைகளுக்கு உணவு வழங்குவதற்காக அந்த கிராமத்தில் வீடுவீடாக சென்று அரிசியை நன்கொடையாக பெற்று வந்தோம். நாங்கள் பணம் எதுவும் கேட்கவில்லை’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘ முதலில் சில நாட்கள் அந்த கிராம மக்கள் எங்களுக்கு உதவி செய்தார்கள். இதனால் குறிப்பிட்ட அளவு அரிசி கிடைத்தது. ஆனால், 3வது நாளில் கிராம மக்களின் மன நிலை மாறிவிட்டது. திடீரென ஒரு கும்பல் எங்களை திட்டி தாக்கியது’’ என்றார்.

தொடர்ந்து சிங் கூறுகையில், ‘‘எங்களை அவர்கள் தாக்கிய போது ஒரு போலீஸ்காரர் அங்கு இருந்தார். எங்களை முகத்தில் மட்டும் அடிக்க வேண்டாம். உடலில் எங்கு வேண்டுமானாலும் அடியுங்கள் என்று அந்த கும்பலுக்கு அறிவுரை வழங்கினார். இதன் பின்னர் போலீசார் எங்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். எங்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்தது’’ என்றார்.

‘‘இந்த சம்பத்திற்கு பிறகு யாருக்கும் உதவக் கூடாது என்று முடிவு செய்துவிட்டேன். மக்களுக்கு நல்லது செய்ய போய் எங்களுக்கு இப்படி நடந்துவிட்டது. மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று புனித நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எங்களுக்கு இப்படி நடந்துவிட்டது’’ என்று வேதனையுடன் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு சிங் குடும்பத்தினர் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவரது மகன் கோல்டி சிங் கூறுகையில், ‘‘ அறக்கட்டளைக்கு பணியாற்ற எங்களது தந்தையை எங்கும் அனுப்ப மாட்டோம். அஜ்மரில் இருந்து எனது தந்தை காயங்களுடன் திரும்பியதை கண்டு எங்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. எதற்காக மக்களுக்கு உதவ நினைத்த வயதானவரை அடித்தார்கள் என்பது இன்னும் எங்களுக்கு புரியவில்லை’’ என்றார்.