பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகளில், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் முன்னிலையில் இருந்துவரும் பாரதீய ஜனதாவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முதல்வர் பதவி மற்றும் அமைச்சரவை அதிகாரப் பகிர்வு தொடர்பாக பிரச்சினை எழும்பட்சத்தில், நிதிஷ் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறி, லாலு பிரசாத் கட்சியுடன் கைகோர்த்து ஆட்சியமைக்கலாம் என்ற ஒரு கருத்து நிலவுகிறது.

கடந்தாண்டு மராட்டிய சட்டசபைத் தேர்தலில், பா.ஜ. கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கும், பாரதீய ஜனதாவுக்கும், முதல்வர் பதவி தொடர்பாக மோதல் எழுந்ததால், அக்கூட்டணியால் ஆட்சியமைக்க முடியவில்லை. பாரதீய ஜனதா கட்சி 100க்கும் மேற்பட்ட இடங்களிலும், சிவசேனா 50க்கும் மேற்பட்ட இடங்களிலும் வென்றிருந்தது.

இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணியை, சிவசேனாவுக்கு முதல்வர் பதவியை தருவதாக கூறி, அக்கட்சியை தம் பக்கம் இழுத்து, சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் என்று பெரிய கூட்டணி ஆட்சி அமைந்தது.

மாநில சட்டசபையில் பெரிய கட்சியான பாரதீய ஜனதா தனித்துவிடப்பட்டது மற்றும் அசிங்கப்படுத்தப்பட்டது. தற்போது பீகாரிலும் கிட்டத்தட்ட அதே சூழல் நிலவுகிறது.

கூட்டணியில், அதிக இடங்களை வென்ற காரணத்தை முன்வைத்து, கடந்த 15 ஆண்டுகளாக முதல்வராக இருந்துவரும் நிதிஷ்குமாருக்கு பதவியை விட்டுத்தர பா.ஜ. மறுத்தால், நிதிஷ் கட்சி கூட்டணியிலிருந்து வெளியேறி, ராஷ்ட்ரிய ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து, முதல்வர் பதவியைப் பெற்று ஆட்சியமைக்கலாம் என்று ஒரு கருத்து நிலவுகிறது.

அதேசமயம், அப்படி நிதிஷ் கட்சி வெளியேறுவது குறித்து பாரதீய ஜனதாவும் கட்டாயம் சிந்தித்து, அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது.

மேலும், நிதிஷ்குமார் ஏற்கனவே ஒருமுறை பெரிய துரோகம் செய்தவர் என்பதால், இந்த விஷயத்தில், லாலுபிரசாத் கட்சியும் யோசித்தே செயல்படும்.

[youtube-feed feed=1]