மும்பை: ஐசிசி மற்றும் பிசிசிஐ விதிமுறைகளின்படி, இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியின்போது, ஜடேஜாவுக்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. மேலும், மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்து ஜடேஜாவின் முன்தலைப் பகுதியில் தாக்கியது. அவர் ஹெல்மட் அணிந்திருந்தாலும், அதனால் மனஅதிர்ச்சிக்கு ஆளானார்.
எனவே, அவர் பீல்டிங் செய்யவில்லை. ஐசிசி விதிமுறைகளின்படி, தலையில் காயம்பட்ட ஒரு வீரர், 7 முதல் 10 நாட்கள் வரை ஓய்வில் இருப்பது அவசியம்.
தலைப்பகுதி காயம் அவருக்கு விரைவாக குணமடைந்து வந்தாலும், தொடைப் பகுதி காயம் இன்னும் சரியாகவில்லை. மேலும், ஜடேஜா, பயிற்சிப் போட்டியிலும் பங்கேற்கவில்லை.
பிசிசிஐ விதிகளின்படி, அந்நிய மண்ணில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் ஒருவர், கட்டாயம் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றிருக்க வேண்டும். இல்லையெனில், அவரால் டெஸ்ட்டில் பங்கேற்க இயலாது.
எனவே, இத்தகைய விதிமுறைகளால், ஆல்ரவுண்டர் ஜடேஜாவால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் & இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இயலாது என்றே கூறப்படுகிறது. இது இந்திய அணிக்கு நிச்சயம் இழப்புதான்.