கொல்கத்தா: வரும் 2021ம் ஆண்டில் மேற்குவங்க மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், பாரதீய ஜனதா சார்பில் சவுரவ் கங்குலி முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படவுள்ளாரா? என்ற செய்திகள் வேகமாகப் பரவி வருகின்றன.
இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக, யாரும் எதிர்பாராத நிலையில் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. பிசிசிஐ செயலராக உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கு சில தினங்களுக்கு முன்னர் உள்துறை அமைச்சரை, சவுரவ் கங்குலி மும்பையில் சந்தித்துப் பேசினார். எனவே, அவரின் தேர்வுக்கும் இந்த சந்திப்பிற்கு வலுவாக முடிச்சுப் போடப்படுகிறது.
கங்குலி பாரதீய ஜனதாவில் சேரவுள்ளதாகவும், இதனால்தான் அவருக்கு உபகாரம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில் உச்சகட்டமாக, 2021ம் ஆண்டு மேற்குவங்க சட்டசபைத் தேர்தலில் கங்குலி முதல்வர் வேட்பாளராக அறிவித்து, மம்தா பானர்ஜிக்கு கடும் நெருக்கடி கொடுக்க பா.ஜ. முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் பரவி வருகின்றன.
ஆனால், இந்தத் தகவல்களை அமித்ஷா திட்டவட்டமாக மறுத்துள்ளார். கங்குலியின் தேர்வுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றும், அவர் விரும்பினால் பாரதீய ஜனதாவில் சேரலாம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.