புதுடெல்லி: முகநூலில் பொதுவாழ்வில் ஈடுபட்டிருக்கும் நபர்களால் பதியப்பட்ட வெறுப்பை விதைக்கும் கருத்துகள் நீக்கப்படுவது தொடரும் என்று காங்கிரஸ் கட்சியிடம் உறுதியளித்துள்ளது முகநூல் நிறுவனம்.
இதுதொடர்பான முடிவுகள் தனித்து மேற்கொள்ளப்படுவதில்லை என்றும், நிறுவனத்தின் பல்வேறு குழுக்களிலிருந்து வரும் தகவல்களின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்த அந்நிறுவன தலைமை அலுவலகத்திலிருந்து, அந்நிறுவனத்தின் பொதுக் கொள்கை இயக்குநர் நீயல் போட்ஸ், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கு இதுதொடர்பான மின்னஞ்சலை அனுப்பியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதில், “மதம், ஜாதி, இனம் மற்றும் தேசிய அடையாளம் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் விஷமப் பிரச்சாரங்களை எங்களின் சமூக தரநிலை விதிமுறைகள் தடைசெய்கின்றன. எங்களின் கொள்கைக்கேற்ப, வெறுப்பை உமிழும் பதிவுகளை நீக்கி வருகிறோம் மற்றும் அந்த செயலை எதிர்காலத்திலும் தொடர்வோம்” என்று கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, கடந்த மாதம் காங்கிரஸ் தலைவர் வேணுகோபால், முகநூல் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பொருட்டுதான் தற்போது பதில் அனுப்பப்பட்டுள்ளது.