டெல்லி
காங்கிரஸ் கட்சி துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம் என தகவல்கள் வந்துள்ளன.

நேற்று முன்தினம் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல்நல பிரச்சினைகள் தொடர்பாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இவரது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார். எனவே புதிய துணை ஜனாதிபதியை விரைவில் தேர்ந்து எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
துணை ஜனாதிபதி பதவி காலியானால் விரைவில் புதியவர் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என அரசியலமைப்பில் கூறப்பட்டு இருக்கிறது. புதிய துணை ஜனாதிபதி தேர்ந்து எடுக்கப்படும் வரை தற்போதைய மாநிலங்களவை துணைத்தலைவரான ஹரிவன்ஷ் நாராயண்சிங் மாநிலங்களவை தலைவர் பொறுப்பை கவனிப்பார்.
மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு க்கு எதிர்க்கட்சிகளை விட சுமார் 70 எம்.பிக்கள் அதிகம் உள்ளனர் என்பதால் புதிய துணை ஜனாதிபதி தேர்வு பாஜக விருப்பத்துக்கு ஏற்பவே அமையும் ர்ம்ச்ப்ர்ர்தேர்தலில் போட்டியிட்டாலும் வெற்றி பெற இயலாது என்பதால் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி துணை ஜனாதிபதி தேர்தலை சந்திக்குமா? என்ற கேள்விக்குறி பலரது மனதிலும் இருந்து வந்தது.
ஆயினும் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். நேற்று டெல்லியில் இது தொடர்பாக இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்தித்தபோது ஆலோசனை நடத்தி தேர்தல் அறிவிக்கை வெளியானதும் மீண்டும் கூடி முடிவெடுக்க திட்டமிட்டுள்ளனர்.