சிங்கப்பூர்: பூனைகளுக்கு ஏற்படும் கொரோனா வைரஸ்கள் மற்றும் லுக்கேமியா தொடர்பான நோய்களைக் குணப்படுத்த உதவும் ஒரு ஆன்டிவைரஸ் மருந்து, மனிதர்களைத் தாக்கும் கொரோனாவை குணப்படுத்த உதவலாம் என்ற தீர்வுக்கு வந்துள்ளது மலேசியா & சிங்கப்பூரை சேர்ந்த ஒரு மருந்து நிறுவனம்.
அந்த மருந்தின் பெயர் ரெட்ரோமட்1. பூனைகளுக்கு ஏற்படும் ஆபத்தான வைரஸ் தொற்றுகளான ஃபெலைன் லுக்கேமியா வைரஸ் மற்றும் ஃபெலைன் இன்ஃபெக்சியஸ் பெரிடோனிட்டிஸ் வைரஸ் ஆகியவற்றை இந்த மருந்து வெற்றிகரமாக குணப்படுத்துவது ஆய்வுப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கண்டவற்றில் இரண்டாவதாக கூறப்பட்ட வைரஸ், FeCoV என்றும் அழைக்கப்படுகிறது. இது கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு வைரஸ்தான் மனிதர்களை தற்போது பாடாய்படுத்தி வருகிறது.
ரெட்ரோமட்1 மருந்து சிங்கப்பூரின் சில கால்நடை மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த மருந்து மனிதப் பயன்பாட்டுக் காரணத்திற்காக அதிகாரப்பூர்வமாக சோதிக்கப்படவில்லை என்றாலும், மனிதர்களில் ஏற்படும் ஒருவித தோல் அழற்சி நோய்க்காக நேரடியாக கண்டறியப்பட்டது என்று கூறப்படுகிறது.
எனவே, இந்த மருந்து கோவிட்-19 ஐ உருவாக்கும் கொரோனா வைரஸை இந்த மருந்து எப்படி கட்டுப்படுத்துகிறது என்ற சோதனையை மேற்கொள்ள மருந்து நிறுவனமான பையோவேலன்ஸ் டெக்னாலஜிஸ் தயாராக உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.