மும்பை: கடன் பாக்கி தொடர்பாக அடுத்தாண்டு பிப்ரவரி 7ம் தேதி லண்டன் வர்த்தக நீதிமன்றத்தில் அனில் அம்பானி ஆஜராக வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

சில சீன வங்கிகள் லண்டன் வர்த்தக நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சீனாவைச் சேர்ந்த ஐசிபிசி, சீன டெவலப்மென்ட் வங்கி, எக்ஸ்போர்ட் – இம்போர்ட் பேங்க் ஆஃப் சீனா ஆகிய 3 வங்கிகள், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்திற்கு சுமார் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், அந்த நிறுவனம் மோசமாக நஷ்டமடைந்ததால், சீன வங்கிகளிடம் வாங்கிய கடனை அனில் அம்பானி திருப்பி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அந்த வங்கிகள் அனிலுக்கு எதிராக லண்டன் வர்த்தக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன.

இந்த வழக்கில் அனில் அம்பானி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட நிலையில், அவர் வரும் பிப்ரவரி 7ம் தேதி நேரில் ஆஜராக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அனிலின் மூத்த சகோதரர் முகேஷ் அம்பானி வர்த்தக உலகில் வெற்றிகரமாக இயங்கிவரும் நிலையில், அனில் அம்பானியோ தொடர்ந்து சறுக்கி வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.