டில்லி:

டில்லி மாநில தலைமை செயலாளர்  அன்ஷூ பிரகாசை கடந்த 19ந்தேதி அன்று இரவு முதல்வர கெஜ்ரிவால் வீட்டில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின்போது, ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் தாக்கினார்கள். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக தலைமை செயலாளர் கவர்னரிடம் புகார் கூறியதை தொடர்ந்து,   அன்ஷூ பிரகாசை தாக்கிய எம்எல்ஏ ஒருவரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவர் சரண் அடைந்தார். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், தலைமை செயலாளர் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து, நேற்று கெஜ்ரிவால் இல்லத்தில் கவர்னர் உத்தரவின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அங்குள்ள சிசிடிவி புட்டேஜ்களை ஆராய்ந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக வீட்டில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் வெளியேறினார்.

இந்த சோதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய  ஏடிஜிபி ஹரேந்திர குமார் சிங்: “அந்த அறைக்கு வெளியே இருந்த சிசிடிவி கேமாராக்களில் கிடைத்துள்ள புட்டேஜ்  மூலம் விசாரணை நடத்தப்படும் என்றார்.

இதுகுறித்து கெஜ்ரிவால் டுவிட் போட்டுள்ளார். அதில் , “இப்படி என் வீட்டில் சோதனை நடத்தியதைப் போல நீதிபதி லோயா மரணம் தொடர்பாக அமித்ஷா வீட்டில் சோதனை நடத்த முடியுமா?” என்று  கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு மாநில முதல்வர் வீட்டில், அவர் ஆட்சியில் இருக்கும்போதே  காவல்துறையினர் சோதனை நடத்துவது இதுவே முதல்முறை. இதற்கு நாடு முழுவதும் பலத்த கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.