புதுடெல்லி:

மறைந்த காங்கிரஸ் தலைவர் என்.டி.திவாரியின் மகன் ரோஹித் சேகர் திவாரியின் கொலை வழக்கில், அவரது மனைவி அபூர்வா மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ரோஹித் திவாரி மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்த சமயத்தில் மனைவி அபூர்வா, ஓட்டுநர் ஆகியோர் மீது போலீஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, இந்த வழக்கு தொடர்பாக மனைவி அபூர்வா, ஓட்டுநர் ஆகியோரை தனித்தனியாக விசாரணை செய்து அவர்களது வாக்குமூலங்களைப் பதிவு செய்தோம்.

ஆனால் இவர்கள் சில கேள்விகளுக்கு திருப்திகரமான பதில்களை அளிக்கவில்லை. இவர்கள் இருவர்தான் எங்களின் சந்தேகக் குற்றவாளிகள் என்று கருதுகிறோம்.

சம்பவம் நடந்த அன்றைய தினத்தில் மனைவி அபூர்வா, ஓட்டுநர் அகிலேஷ் ஆகியோர்தான் முதல் தளத்தில் இருந்தனர். சாட்சியங்களின் படி பார்த்தால் ரோஹித்தை சொத்துக்காகக் கொலை செய்துள்ளதாகத் தெரிகிறது.

விசாரணையின் போது, 2017ம் ஆண்டு திருமணம் முதலே ரோஹித்-அபூர்வா உறவு சரியாக இல்லை என்று தெரியவந்தது. இருவரும் ஒரே வீட்டில் தனித்தனியாக வாழ்ந்துள்ளனர். அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதாக சாட்சியங்கள் மூலம் தெரியவந்துள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.

ரோஹித் சேகர் திவாரியின் தாயார் கூறும்போது, “சேகரைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னதாக அபூர்வாவிற்கு வேறொருவருடன் தொடர்பு இருந்தது. அபூர்வா குடும்பத்தினர் பணப் பேய்கள். எங்கள் சொத்தின் மீது அவர்களுக்கு கண் இருந்தது. டிபன்ஸ் காலனி சொத்து மீது அவர்களுக்கு ஒரு கண். அதனை என் மகன்கள் சித்தார்த், சேகர் ஆகியோரிடம் இருந்து பறிக்க திட்டமிட்டனர். துக்க நாட்கள் முடிந்தவுடன் நான் அனைத்தையும் வெளியிடுவேன்” என்று கூறியுள்ளார்.