சாத்தூர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சி தேர்தலில் தனது மனைவி தோல்வி அடைந்ததால் கணவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில்  உள்ள சாத்தூர் நகராட்சியில் மொத்த 24 வார்டுகள் உள்ளன. இவற்றில் திமுக 18 வார்டுகளில் வெற்றி பெற்று சாத்தூர் நகராட்சியைக் கைப்பற்றியது.  அடுத்ததாகத் அதன் கூட்டணிக் கட்சியான மதிமுக 2 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1 வார்டிலும் வெற்றி பெற்றன.  மேலும் அதிமுக, அமமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

சாத்தூர் நகராட்சியில் துப்பரவுப் பணி மேற்பார்வையாளராகப் பணியாற்றி வருபவர் நாகராஜன் (58) என்பவரது மனைவி சுகுணாதேவி ஆவார்.  சுகுணாதேவி நகர்ப்புற ஊராட்சி தேர்தலில் சாத்தூர் நகராட்சி 19-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். தேர்தலில் இவர் 215 வாக்குகள் மட்டுமே பெற்றுத் தோல்வியடைந்து இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுபிதா 595 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

நாகராஜன் தனது மனைவி தோல்வியடைந்ததில் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். நாகராஜனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாகராஜன் இம்மாதம் இறுதியில் பணி ஓய்வுபெறும் நிலையில், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் சாத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.