ஊரடங்கை மீறி ஊர் சுற்றிய கணவன். . போலீசில் போட்டுக்கொடுத்த மனைவி..


கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே மூவாட்டுபுழாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஊரடங்கைப் பொருட்படுத்துவதே இல்லை.

சூரியன் மறையும் நேரத்தில் ’பைக்’.கை எடுத்துக்கொண்டு ஊர் சுற்றக் கிளம்பி விடுவார்.

‘ எங்கே?’’என்று மனைவி கேட்டால்’ என் பெற்றோரைப் பார்க்கப் போகிறேன்’’ என்று கூறுவார்.

பையில் மருந்து சீட்டும், சில மாத்திரைகள் அடங்கிய ‘ஸ்டிரிப்’ பும் வைத்துக்கொண்டு புறப்படும் ஆசாமி இரவில் தான் வீடு திரும்புவார்.

ஊரடங்கு உத்தரவை உதாசீனப்படுத்தி விட்டு, கணவன் ஊர் சுற்றி வருகிறான் என்பது மனைவிக்குத் தெரிந்து விட்டது.

‘கொரோனா தொற்றினால் என்னாவது?’’ என்று புத்தி சொல்லிப்பார்த்தார்.

புருஷன் கேட்பதாக இல்லை.

15 நாட்களாக இது தொடர்கதையாகவே இருந்தது.

பொறுமை இழந்த மனைவி, போன் மூலம்  போலீசில் முறையிட்டார்..

கணவனின் அங்க லட்சணங்கள், ’பைக் நம்பர், வீட்டில் இருந்து அவன் புறப்படும் நேரம் போன்ற விவரங்களை போலீசுக்கு துப்பு கொடுத்தார்.

நேற்று முன் தினம்  சாலையில் ஜாலி ரைடு சென்ற அந்த ஆசாமியை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

;;ஊரடங்கு நேரத்தில் எங்கே போகிறாய்?’ என்று கேட்டுள்ளனர்.

பையில் வைத்திருந்த மாத்திரையைக் காட்டிய ஆசாமி’ மருந்து வாங்க மெடிக்கல் ஷாப்  போகிறேன்’’ என்று ஜால்சாப்பு சொல்லியுள்ளார்.

அவரது துரதிருஷ்டம் –

அந்த ‘ஸ்டிரிப்பில்’ 10 மாத்திரைகள் இருந்தன.

அதாவது 10 நாட்களுக்குத் தேவையான மாத்திரைகள்.

‘பொய்யா சொல்கிறாய்?’ என்று நாலு போடு போட்ட போது-

உண்மையை ஒத்துக்கொண்டார், அந்த ஊர் .சுற்றி.

கைது செய்து அவரை போலீஸ் நிலையம் கொண்டு சென்ற போலீசார் பின்னர், ஜாமீனில் விடுவித்தனர்.

கொலையும் செய்வாள் பத்தினி. என்பார்கள்.

கோபம் வந்தால் போலீசில் காட்டியும் கொடுப்பாள்.

– ஏழுமலை வெங்கடேசன்