சென்னை:  சென்னையில் நள்ளிரவில் பரவலாக மழை பெய்த நிலையில், தமிழகத்தில் வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு  உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் வரவிருக்கும் நாட்களில் வானிலை மாற்றம் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மார்ச் 18   முதல் 24 வரை பல பகுதிகளில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  மார்ச் 18ந்தேதி நள்ளிரவு பரவலாக கோடை மழை பெய்தது. கோடம்பாக்கம், சூளைமேடு, வடபழனி, வளசரவாக்கம், போரூர், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததன் காரணமாக இதமான சூழல் நிலவுகிறது இதன் காரணமாக கொளுத்திய கடும் வெயில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இன்று (மார்ச் 19)   தமிழகத்தின் பல இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இதேபோன்ற வானிலை நிலை நிலவ வாய்ப்புள்ளது. இந்த நாட்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மார்ச் 20 மற்றும் 21 தேதிகளில் மழை தீவிரம் மேலும் அதிகரிக்கக்கூடும். தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் நிலையில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பரவலாக மழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 22 மற்றும் 23 தேதிகளில் மழை நிலை தொடரும். இந்த நாட்களில் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புடன், சில இடங்களில் வேகமான காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழை காரணமாக பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மார்ச் 23 மற்றும் 24 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தென் தமிழக பகுதிகளில் அதிக மழை பெய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த பகுதிகளில் மழை தீவிரம் கூடும் நிலையில், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், 18 முதல் 23 வரை தமிழகத்தில் பல இடங்களில் வெப்பநிலை வழக்கத்தை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். இதனால் வெப்பம் மற்றும் மழை இரண்டும் கலந்து காணப்படும் வானிலை நிலை உருவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

[youtube-feed feed=1]