மும்பை: குடியுரிமை சட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை அளிக்க வகை செய்யாதது ஏன் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மகாராஷ்டிராவில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு: புதிய குடியுரிமை சட்டம் நாட்டின் ஒற்றுமை, அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது.
பாகிஸ்தான். வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் அகதிகளுக்கு குடியுரிமை அளிக்கிறது. ஆனால் அதே மத்திய அரசு, இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை அளிக்க வகை செய்யாதது ஏன்?
நாட்டில் உள்ள மிக முக்கிய பிரச்னைகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப, குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு பயன்படுத்துகிறது.
இந்த சட்டத்தை சிறுபான்மையினர் மட்டும் எதிர்க்கவில்லை. நாட்டின் ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்துக்காக கவலைப்படுவோரும் இதை எதிர்க்கின்றனர் என்று கூறினார்.