21வது சட்ட ஆணையத்தால் நிராகரிக்கப்பட்ட பொது சிவில் சட்டத்தை 22வது சட்ட ஆணையம் மீண்டும் கையில் எடுத்திருப்பது ஏன் ? என்று நாடாளுமன்ற நிலைக்குழுவில் திமுக கேள்வி எழுப்பியுள்ளது.

நாடுமுழுவதும் அனைத்து சாதி மற்றும் மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆண், பெண் என அனைவருக்கும் பொதுவான சட்டம் குறித்து பாஜக கடந்த பல ஆண்டுகளாக கூறி வருகிறது.

ஆனால் பொது சிவில் சட்டத்தில் இடம்பெறக்கூடிய சரத்துகள் குறித்து தெளிவான செயல்முறை என்ன என்று பாஜக இதுவரை தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து விவாதிக்க பாஜக அரசால் அமைக்கப்பட்ட 21வது சட்ட ஆணையம் இரண்டாண்டு ஆய்வுக்குப் பின் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து அறிக்கை அளித்திருந்தது.

 

இந்த நிலையில், பொது சிவில் சட்டம் குறித்து பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக-வினர் மீண்டும் பொதுவெளியில் பேசிவருகின்றனர். இது மீண்டும் விவாதப்பொருளாகி உள்ள நிலையில் 22வது சட்ட ஆணையம் பொது சிவில் சட்டம் குறித்து ஆய்வு செய்ய இருப்பதாக கூறப்படுவதை திமுக எதிர்த்துள்ளது.

இதுகுறித்து நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் “ஏற்கனவே 21வது சட்ட ஆணையத்தால் ஒதுக்கிவைக்கப்பட்ட பொது சிவில் சட்டம் குறித்து மீண்டும் விவாதிக்க நினைப்பது ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி நடத்திய ஆய்வை முற்றிலும் நிராகரிப்பது போல் உள்ளது.

பாஜக-வின் இந்த செயல் 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலை கருத்தில் கொண்டே மீண்டும் கையிலெடுக்கப்பட்டுள்ளது இதுகுறித்து 22வது சட்ட ஆணையம் ஆய்வு செய்யும் என்று கூறியிருப்பது ஒரு கண்துடைப்பு நாடகம்” என்று குற்றம்சாட்டியுள்ளது.