நாகர்கோவில்:
கன்னியாகுமரியில் திரைப்பட இயக்குனர் அமீர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘உச்சநீதிமன்ற உத்தரவிட்டிருப்பதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தவிர மத்திய அரசுக்கு வேறு வழியில்லை. கர்நாடகா தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது.
தமிழக விவசாயிகளின் நலன் கருதி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் வரும் 28-ம் தேதிக்கு பின்னர் தமிழகம் ஸ்தம்பிக்கும் வகையில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும். ஊடக பெண் ஊழியர்கள் குறித்து அவதூறாக பேசிய எஸ்.வி. சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை’’ என்றார்.
மேலும், அவர் கூறுகையில், ‘‘தமிழக தலைமை செயலாளரின் உறவினர் என்பதால்தான் எஸ்.வி. சேகர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் கவர்னர் விசாரணை கமிஷன் அமைப்பது ஏற்புடையதல்ல. இதில் மிக முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருக்கிறது. அதனால் முழுமையாக விசாரிக்க வேண்டும். தொடர்புடைய அனைவரையும் தண்டிக்க வேண்டும்’’ என்றார்.