‘கூல் லிப்’ போன்ற போதைப் பொருளை தயாரிக்கும் நிறுவனத்திடம் இருந்து ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவது மிகவும் வேதனையான ஒன்று. ‘கூல் லிப்’ போதைப் பொருளை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து ஏன் நாடு முழுவதும் தடை செய்யக் கூடாது? என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து பள்ளி கல்லூரிகள் அருகே விற்கப்படும் ஒரு வகை போதைப் பொருள் இந்த கூல் லிப்.
புகையிலையைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த மலிவுக்கு விற்கப்படும் போதைப் பொருளின் விற்பனை தமிழகம் முழுவதும் படு ஜோராக நடைபெறுகிறது.
இந்த கூல் லிப் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் இயல்பு நிலையில் இல்லாமல் தாங்கள் எங்கு இருக்கிறோம் என்ன வேலைக்காக வந்திருக்கிறோம் என்பதையே மறந்து சுற்றி திரிகின்றனர்.
இதற்கு மாணவர்கள் மட்டுமன்றி வேலை செய்யும் இளைஞர்கள், அரசு ஊழியர்கள் என பலரும் அடிமையாக இருக்கின்றனர்.
இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று நடைபெற்றது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூல் லிப் எனும் போதைப் பொருளுக்கும் அதிகம் அடிமையாகின்றனர். இத்தகைய போதைப் பொருளை தயாரிக்கும் நிறுவனத்திடம் இருந்து ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவது மிகவும் வேதனையான ஒன்று.
போதைப் பொருளை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து ஏன் நாடு முழுவதும் தடை செய்யக் கூடாது? என்று நீதிபதி பரத சக்கரவர்த்தி கேள்வி எழுப்பினார்.
மேலும், இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் விளக்கமளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.