அரசியல் விமர்சகர், கல்வியாளர், பொருளாதார அறிஞர் மற்றும் இன்னும் பலவகை அடைமொழிகளால், ஒருவகையில் கிண்டலுக்கு ஆளானவர் ஆர்எஸ்எஸ் உறுப்பினரும், முன்னாள் பாஜக பிரமுகரும், பிராமண சமூகத்தைச் சேர்ந்தவருமான திரு.ராமசுப்ரமணியன்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக கடந்த 1.5 ஆண்டுகளாக அவரின் பேச்சு மற்றும் கருத்துகளில் மிகப்பெரிய மாற்றங்களை நம்மால் காண முடிகிறது.

தன்னை ஒரு ஸ்வயம் சேவக் என்று பெருமையாக சொல்லிக் கொள்பவர் அவர்! பாஜக உறுப்பினராக இருந்து, அக்கட்சியின் சார்பாக விவாதங்களில் பங்கேற்று வந்தவர்.

ஆனால், அதன்பிறகு திடீரென முரண்பட்டு அக்கட்சியிலிருந்து விலகினார் மற்றும் அக்கட்சியின் நடவடிக்கைகளையும் வெளிப்படையாக விமர்சிக்க தொடங்கினார். தன்னை ஆர்எஸ்எஸ் தொண்டர் என்று தொடர்ச்சியாக சொல்லிக்கொள்பவர், மனுஸ்மிருதி குறித்த திருமாவளவன் கருத்திலும், சங்பரிவார ஆட்களுக்கு எதிராகவே பேசினார்.

பல்வேறு நிலைப்பாடுகளில், பாஜக – அதிமுக கூட்டணிக்கு எதிராகப் பேசி வருகிறார். திமுகவின் பிரமாண அணிக்கு தலைமை தாங்கப் போகிறீர்களா? என்று தன்ன‍ை நோக்கி வ‍ைக்கப்படும் கேள்வியையும் அசால்ட்டாக, புன்முறுவலுடன் கடந்து செல்கிறார்.

தற்போது, “பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்காக ஸ்டாலினை நேரடியாக சந்தித்துவிட்டு வந்தேன். அவர் ஒரு மேன்மையான மனிதர்!” என்று புகழ்கிறார்.

இந்த சட்டமன்ற தேர்தல் தொடர்பாகவும் பார்த்தால், திமுக அணிக்கு ஆதரவாகவே பேசுகிறார். அதிமுக என்று எடுத்துக்கொண்டால், சசிகலாவுக்கு ஆதரவாக பேசுகிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக இவர் வெளிப்படுத்திய கருத்துகளுக்கும், இப்போதை கருத்துகளுக்கும் கிட்டத்தட்ட சம்பந்தமே இல்லாத நிலை! பிராமண சமூகத்தில் நல்ல நிலையில் உள்ள ராமசுப்ரமணியம் என்ற நபரின் இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்?

தமிழ்நாட்டின் பிராமண பிரபலங்களுக்கு இடையே நடைபெறும் யார் பெரியவர் என்ற லாபி காரணமா? கடந்த சில ஆண்டுகளாகவே, அந்த மோதல், குருமூர்த்தி – சுப்ரமணியசாமி இடையே உச்சத்தில் இருந்து வருகிறது. எனவே, இந்தப் போட்டியில் சிக்கிகொள்ள விரும்பாமல், யாரும் எதிர்பாராத வேறு வழியை தனக்கென தேர்ந்தெடுத்துக்கொண்டு விட்டாரா ராமசுப்ரமணியன்?

ஒரேவிதமான நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு குழுவுக்குள் சென்று, தன்ன‍ை பெரிய ஆளாக நிலைநிறுத்திக் கொள்ள முயல்வதைவிட, அதற்கு எதிரணிக்கு ஆதரவாக பேசி, அதன்மூலம் தனக்கான முக்கியத்துவத்தை அதிகரித்துக் கொள்ளும் உத்தியை கையாள்கிறாரா அவர்?