டில்லி:
நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடிக்கு டஃப் கொடுக்கும் வகையில் வாரணாசி தொகுதியில் அவருக்கு எதிராக பிரியங்கா காந்தி களமிறங்குவார் என பரபரப்பாக நிகழ்வுகள் நடைபெற்று வந்த நிலையில், கடைசி நேரத்தில் பிரியங்காவுக்கு பதில் அஜய் களமிறக்கப்பட்டுள்ளார்.
இது காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமல்லாத அரசியல் கட்சியினரிடையே வியப்பை ஏற்படுத்திய நிலையில், பிரியங்கா போட்டியிடாதது ஏன் என்பது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா விளக்கம் தெரிவித்துள்ளார்.
வாரணாசி மக்களவை தொகுதியில் (பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து) போட்டியிட வேண்டாம் என்பது பிரியங்கா காந்தியின் சொந்த முடிவு என்று தெரிவித்துள்ளார்.
உ.பி கிழக்கு பகுதி பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்ட பிரியங்கா காந்தி உ.பி.யில் காங்கிரஸ் கட்சி வேட்பாள்ர்களுக்காக தீவிர பிரசாரம் மேற்கொண்டார். உ.பி.யில் போட்டியிடும், அவரது தாய் மற்றும் சகோதருக்கு ஆதரவாக களமிறங்கிய பிரியங்கா, மோடியின் வாரணாசி தொகுதியிலும் பிரசாரம் செய்து அதகளப்படுத்தினார்.
முன்னதாக ரேபரேலி தொகுதியில் நடைபெற்ற பிரசாரப் பேரணியின்போது, காங்கிரஸ் தொண்டர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும், பிரியங்கா இங்கு போட்டியிட வேண்டும் என்று வற்புறுத்தினர். அவர்களிடம் எதிர்கேள்வி கேட்ட பிரியங்கா, ஏன், நான் வாராணசி தொகுதியில் போட்டியிடக் கூடாதா? என்றார்.
இதன் காரணமாக அவர் வாராணசி தொகுதியில் மோடியை எதிர்த்துப் போட்டியிடக் கூடும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவரை பொது வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் கட்சியும் முயற்சி மேற்கொண்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், வாராணசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அஜய் ராய் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டியிடவில்லை என்பது உறுதியானதுடன், காங்கிரஸ் தொண்டர்களிடையே ஏன் பிரியங்காவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா விளக்கம் அளித்தார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா, வாராணசி தொகுதியில் போட்டியிடாதது அவரது சொந்த முடிவு. அங்கு போட்டியிடுவது குறித்து அவரே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று கட்சித் தலைமை கூறிவிட்டது.
எனவே, வாராணசியில் போட்டியிட வேண்டாம் என்பது பிரியங்காவின் சொந்த முடிவு. தேர்தலில் போட்டியிட்டால் அவர் அந்த ஒரு தொகுதியில்தான் அதிக கவனம் செலுத்த வேண்டியது இருக்கும். ஆனால், தற்போது அவர் பல தொகுதிகளுக்குச் சென்று பிரசாரம் மேற்கொள்ள முடியும். அவருக்கு அளிக்கப்பட்டுள்ள பணியையும் முழுமையாக முடிக்கலாம் என்ற நோக்கத்தில் பிரியங்கா இந்த முடிவை எடுத்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.