சட்டம் ஒழுங்கில் தோல்வி மற்றும் ஆட்சியின் அவலங்களில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பவே நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் முதல்வர் மு.க. ஸ்டாலினின் ஏவல் துறையாக மாறியுள்ளதாக யூடியூபர் சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது :

“நடிகைகளை அவதூறாக பேசினார் என்று, டாக்டர் காந்தராஜ் மற்றும், முக்தார் ஆகியோர் மீது, நடிகை மற்றும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பாலியல் புகார் குழுவின் தலைவர் ரோகிணி அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை 15 செப்டம்பர் 2024 அன்று பதிவு செய்யப்பட்டது.

இது வரை இருவரும் முன் ஜாமீன் கூட கோரவில்லை. இரண்டு மாதங்கள் கடந்தும் சென்னை மாநகர காவல் துறை இருவரையும் இது வரை கைது செய்யவில்லை.

நடிகை கஸ்தூரி, தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்த பிறகும் கூட, தனிப் படைகள் அமைத்து, ஐதராபாத் வரை காவல் துறையை அனுப்பி, இப்படி கைது செய்வதற்கான காரணம், சட்டம் ஒழுங்கில் தோல்வி மற்றும் ஆட்சியின் அவலங்களில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பவே.

இதே போல, மீண்டும் மீண்டும், சட்டத்தை மீறிக் கொண்டிருக்கும் இர்பான் மீது வழக்கு பதிவு செய்யக் கூட காவல் துறை மறுக்கிறது.

மக்கள் பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பவும், பிடிக்காதவர்களை வழக்குகளை ஏவி கைதுசெய்யவும் காவல் துறையை, முக ஸ்டாலின், அவருக்கான கூலிப்படையாகவே பயன்படுத்திக் கொண்டு வருகிறார்.

முதல்வர் ஸ்டாலின் விரைவில் மக்கள் மன்றத்தில் இதற்கான பதிலை சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.