வாஷிங்டன்: பாக். ராணுவ இலக்குகள் எதுவும் தாக்கப்படவில்லை என அமெரிக்காவிற்கான இந்திய தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை; இந்தியாவின் நடவடிக்கைகள் கவனமாகவும் துல்லியமாகவும் உள்ளன. அறியப்பட்ட பயங்கரவாத முகாம்கள் மட்டுமே குறிவைத்து தாக்குதல் என விளக்கம் அளித்துள்ளது.

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் கீழ் அதிகாலை 1.44 மணிக்கு ராணுவத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மேலும் இன்று நாடு முழுவதும் மேலும் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுப்பதற்கு இந்திய ராணுவம் திட்டமிட்டு வந்தது. இதனால் இன்று நாடு முழுவதும் 244 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் புகுந்து 9 பயங்கரவாத முகாம்களை தாக்கியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகளை குறிவைத்து இந்தியா இன்று ஒன்பது இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது. 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியாகி உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையில்,   “சிறிது நேரத்திற்கு முன்பு, இந்திய ஆயுதப்படைகள் ‘ஆபரேஷன் சிந்து’வை தொடங்கி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு & காஷ்மீரில் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகளைத் தாக்கின. இங்கிருந்துதான் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு வழிநடத்தப்பட்டன.”

இந்த நடவடிக்கையில்,   மொத்தம் 9 பயங்கரவாத முகாம்கள் தாக்கப்பட்டுள்ளன. இதில் ஜெய்ஷ்-இ-மொஹம்மதின் பஹாவல்பூர் தலைமையகம் மற்றும் லஷ்கர்-இ-தய்யபாவின் முரித்கே முகாம் உள்ளிட்ட முக்கிய இலக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன.

“இந்த நடவடிக்கைகள் மிகுந்த கவனத்துடனும், கணக்கிட்ட முறையிலுமே மேற்கொள்ளப்பட்டுள்ளன. எந்தவொரு பாகிஸ்தான் ராணுவ கட்டிடங்களும் குறிவைக்கப்படவில்லை. நாங்கள் விரிவான ஆய்வுகளின் பின்னர் துல்லியமான தாக்குதலை மேற்கொண்டோம்,” என்று பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் நேரடி கண்காணிப்பில் இயக்கியதாகவும், மூன்று ராணுவப் படைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவுடன் சேர்ந்து திட்டமிடப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய வான்படை, கடற்படை, நிலப்படை ஆகியவற்றின் காமிகாஜி ட்ரோன்கள் உள்ளிட்ட மேம்பட்ட ஆயுதங்கள் இந்த தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையிலும், இந்தியாவின் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடனும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நிலைமைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியும் நேரடி கண்காணிப்பில் இருக்கின்றதாகவும், தாக்குதலுக்குப் பின் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியா அமைதியை விரும்புகிறதே தவிர, நாட்டின் பாதுகாப்பையும் அற்றாட்சியையும் பாதிக்கும் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் தீர்வாகத் துணிந்து நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்பதைக் காட்டும் முக்கிய கட்டமாக இந்த தாக்குதல் பார்க்கப்படுகிறது.

“எங்கள் நடவடிக்கைகள் கவனம் செலுத்தியதாகவும், அளவானதாகவும், மேலும் பதற்றத்தை அதிகரிக்காத வகையிலும் இருந்தன. பாகிஸ்தானின் எந்த இராணுவ இலக்குகளும் தாக்கப்படவில்லை. இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதிலும், தாக்குதல் முறையிலும் இந்தியா கணிசமான கட்டுப்பாட்டைக் காட்டியுள்ளது,” என்றும் தெரிவித்துள்ளது.