மதுரை : வாகனங்களில் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்ட ஏன் தடை விதிக்கக்கூடாது? என உயர்நீதி மன்றம் மதுரை கிளை தமிழகஅரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது.
வாகனங்களில் வழக்கறிஞர் ஸ்டிக்கர், பிரஸ் என பல வகையான ஸ்டிக்கர்களை போலியாக ஒட்டிக்கொண்டு பலர் முறைகேடான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது பலமுறை பிரச்சினைக்குள்ளாகி உள்ளது. ஆனால், இந்த விஷயத்தில் தமிழகஅரசு முறையான நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது. இதனால் பலர் வழக்கறிஞர் ஸ்டிக்கர்களைக் கொண்ட வாகனங்களில் பயணம் செய்து முறைகேடுகளில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில்,. மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், புற்றீசல்கள்போல் வெளி மாநிலங்களில் பெருகிவரும் சட்டக் கல்லுாரிகளால், வழக்கறிஞர் தொழிலின் புனிதம் பாதித்துள்ளது. வெளிமாநில சட்டக் கல்லுாரிகளில் நேரடியாக படிக்காமல், உரிய கல்வித் தகுதி இன்றி சட்டப்படிப்பை விலைக்கு வாங்குகின்றனர். அவர்கள் தமிழகத்தில் வழக்கறிஞர்களாக வலம் வருகின்றனர். பல வாகனங்களில் வழக்கறிஞருக்குரிய ஸ்டிக்கரை பயன்படுத்துவது வழக்கமாகி வருகிறது. சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் போலீசாரிடமிருந்து தப்பிக்க இந்த ஸ்டிக்கரை பாதுகாப்புக் கவசமாக பயன்படுத்துகின்றனர். சிலசமயங்களில் பலர் சட்டக் கல்லுாரி மாணவர்கள் எனக்கூறிக் கொள்கின்றனர். தமிழகத்தில் சட்டக் கல்லுாரி மாணவர்கள் வாகனங்களில் வழக்கறிஞர் ஸ்டிக்கரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.வழக்கறிஞர் ஸ்டிக்கரை தவறான நோக்கில் வாகனங்களில் பயன்படுத்துவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் சட்டத்தின்பிடி மற்றும் போலீசாரிடமிருந்து தப்பிக்க, வாகனங்களில் வழக்கறிஞர் ஸ்டிக்கரை தவறாக பயன்படுத்துகின்றனர். இதைத் தடுக்கும் வகையில் வழக்கறிஞர் ஸ்டிக்கருக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது என கேள்வி எழுப்பினர்.
மேலும, வாகனங்களில் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதா என்பதற்கு பதிலளிக்க இந்திய பார் கவுன்சில், தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில், தமிழக டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ் அனுப்பி வழக்கை வரும் 23ந்சதேதிக்கு ஒத்திவைத்தனர்.
.