சில நாட்களுக்கு முன்பு, உத்திரப்பிரதேச மாநிலம் மெயின்புரி தொகுதியில், சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளரும், அக்கட்சியின் நிறுவனருமான முலாயம்சிங் யாதவை ஆதரித்து நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு, முலாயமை புகழ்ந்து ஆதரித்துப் பேசினார் மாயாவதி.
பதிலுக்கு முலாயமும் மாயாவதியைப் புகழ்ந்து பேசினார்.
சரி, மாயாவதியும் முலாயமும், 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் கூட்டணி சேர்ந்தது இருக்கட்டும். இதை வைத்து, நமது தமிழ்நாட்டின் சில ஊடகவியலாளர்களும், அரசியல் ஆய்வாளர்களும், வேறு ஒரு பார்வையை முன்வைத்ததுதான் மிகப்பெரிய அபத்தமாக இருந்தது.
“உத்திரப்பிரதேசத்தில் முலாயமும் மாயாவதியும் சேர்ந்தது மாதிரி, நம் தமிழ்நாட்டில் கடைசிவரை, கருணாநிதியும் ஜெயலலிதாவும் சேராமலேயே போய்விட்டார்களே!” என்று அங்கலாய்த்தார்கள்.
அந்த அரசியல் பார்வையாளர்களின் கருத்துக்களை மேலும் சென்று விமர்சிப்பதைவிட, ஏன், முலாயம் – மாயாவதி மீண்டும் சேர்ந்தார்கள்? எதற்காக, தமிழகத்தில் கருணாநிதி – ஜெயலலிதா இறுதிவரை சேரவேயில்லை? என்பதை அலசுவதே வாசகர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
சமாஜ்வாடி கட்சியின் அடுத்த தலைமுறை (அகிலேஷ் யாதவ்) எடுத்த சில முயற்சிகளாலும், மாயாவதி இறங்கி வந்ததாலும், இந்தக் கூட்டணி இப்போது கைக்கூடியிருக்கிறது என்று வைத்துக்கொண்டாலும், இந்த இரு கட்சிகளும், ஏற்கனவே தேர்தல் களத்தில் இணைந்துப் பிரிந்தவை.
ரத யாத்திரையைத் தொடர்ந்த அயோத்தியா விஷயத்தை முன்வைத்து அம்மாநிலத்தில் பிரமாண்டமாக வளர்ந்த பாரதீய ஜனதாவை எதிர்த்துப் போராடி நிலைப்பதற்காக, கடந்த 1993ம் ஆண்டே இணைந்தவர்கள்தான் அந்த இருவரும். அன்றும் பாரதீய ஜனதா பயம் – இன்றும் பாரதீய ஜனதா பயம். ஆனால், எந்த பாரதீய ஜனதாவை பெரிய ஆபத்தாக கருதி, முலாயமுடன் கூட்டு சேர்ந்தாரோ மாயாவதி, அந்த தாமரைக் கட்சியுடனேயே இணைந்து ஆட்சியிலும் அமர்கிறார் பின்னாட்களில்.
உத்திரப்பிரதேச அரசியலே ஒரு பிரமாண்ட கலவையைப் போன்றது. உலகின் பல நாடுகளை விஞ்சிய மக்கள்தொகை, முஸ்லீம்களின் பெரும் எண்ணிக்கை, மதத்தின் பெரும் செல்வாக்கு மற்றும் ஜாதியத்தின் வலுவான தாக்கங்கள் & கணக்கீடுகள் போன்றவை, அங்கே களத்தை பெரும்பாலும் ஒருவருக்கு சாதகமாகவோ அல்லது சிலருக்கு மட்டுமே சாதகமாகவோ வைப்பதில்லை.
சுதந்திரமடைந்த பிறகான பல்லாண்டுகள் காங்கிரஸ் கோலோச்ச, பின்னர் ஜனதா தளம் செல்வாக்கு செலுத்த, பாரதீய ஜனதா வளர்ந்து வர, ஜனதா தளத்திலிருந்து பிரிந்த சமாஜ்வாடி பெரும் சக்தியாக மாற, கன்ஷிராமின் கட்சியான பகுஜன் சமாஜ் பலரின் கவனத்தையும் கவர என்று இப்படியாக அந்தப் பெரிய களத்தில் பலருக்கும் வாய்ப்புகள் இருந்திருக்கிறது தொடர்ச்சியாக.
ஒவ்வொரு தேர்தலிலும், திடீரென ஒரு முக்கிய கட்சி, எதிர்பாராமல் பெரிதாக ஸ்கோர் செய்துவிடும். கடந்த பல்லாண்டுகளாகவே, குறைந்தபட்சம் 4 முனைகளிலிருந்து பெரிய தேர்தல் போட்டிகள் (தமிழகத்தைப்போல் பெயரளவுக்கு இல்லாமல்) அங்கு உண்டு.
தமிழக தேர்தல் வரலாற்றில், நீதிக்கட்சியில் தொடங்கி, காங்கிரஸ் மூலமாக நீண்ட தேர்தல் அரசியல், கம்யூனிஸ்டுகளை பெரிதாக வளரவிடாமல் அல்லது அவர்களால் நழுவவிடப்பட்ட இடத்தை வகையாகப் பிடித்துக்கொண்ட திமுக மற்றும் பின்னாளில் அதிலிருந்து உடைத்துவிடப்பட்ட அதிமுக என காலத்தோடு சேர்ந்து களங்களும் நீண்டு வந்தாலும், கடந்த 1977ம் ஆண்டு முதற்கொண்டு கடந்த 42 ஆண்டுகளாக, திமுக – அதிமுக என்ற இரு கட்சிகளே இங்கு பிரதானப் போட்டியாளர்கள்.
கடந்த 1980ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திரா காங்கிரஸ், சமன்பாட்டை மாற்ற முயன்றாலும் தோல்வியே கிடைத்தது. பல தமிழக தேர்தல்களில், 3 முனைப்போட்டி, 4 முனைப்போட்டி, ஏன் 5 முனைப் போட்டிகள்கூட இருந்ததுண்டு மற்றும் இருந்தும் வருகிறது.
ஆனால், எப்போதுமே, இரு நேரடி முனைகளைத் தவிர, வேறு எந்த முனைகளுக்கும் சொல்லிக்கொள்ளும் வகையில் வெற்றியோ அல்லது இடங்களோ சென்றதே கிடையாது. (அதேசமயம் 1989 தமிழக சட்டமன்ற தேர்தல் சற்று வித்தியாசமானது என்பதையும் கவனத்தில் கொள்வோம்.)
கருணாநிதி – எம்.ஜி.ஆர். ஆகிய இரண்டு அரசியல் எதிரிகள் எதிரெதிர் முனைகளில் நின்று, மூன்றாவது எதிரியாக யாரையும் வளர விடாமல், தமக்கான அரசியல் பலாபலன்களை அனுபவித்தனர்.
எம்.ஜி.ஆர். மறைந்த பிறகான காலத்தில், காங்கிரஸ் மூன்றாவது பெரிய சக்தியாக மீண்டும் உருவாவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் மறுபடியும் தோல்வியில் முடிய, 1989 முதல், தமிழக அரசியல் களத்தின் நிலைமை, கருணாநிதி – ஜெயலலிதா என்று மாறியது.
அவர்கள் இருவரும் எதிரெதிர் அரசியல் முனைகளில் வசதியாக நின்று, தங்களுக்கான அரசியல் பலாபலன்களை கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக அறுவடை செய்தனர்.
மூன்றாவதாக யாரையும் வளர விட்டுவிடவில்லை. பெரிதாக வளர்ந்து விடுவார்களோ என்று எதிர்பார்க்கப்பட்ட நபர்களையும், சமயம் பார்த்து காலி செய்தார்கள்.
உத்திரப்பிரதேசம் போன்று பிரமாண்ட மக்கள்தொகையோ, மதவாத உணர்வுகளோ, மிகப்பெரிய ஜாதிய கணக்கீடுகளோ இல்லாத தமிழ்நாட்டில் வசிக்கும் பெரிய ஜாதிகளை இரு கட்சிகளும் சரியாக அணிசேர்த்து வைத்திருக்கின்றன. சில சிறிய ஜாதியக் கட்சிகள் தொல்லை கொடுத்தாலும், அவைகளின் வாக்கு வங்கி அதிகபட்சம் 6% என்ற நிலைக்குள்தான்.
திமுக – அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் நிரந்தர எதிரிகளாக நிலைத்திருக்க, காங்கிரஸ், பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், தமாகா, கம்யூனிஸ்டுகள் மற்றும் முஸ்லீம் கட்சிகள் போன்ற சிறிய வட்ட செல்வாக்குக் கொண்ட கட்சிகள், திமுக மற்றும் அதிமுகவிற்கு தற்காலிக நண்பர்கள் மற்றும் எதிரிகள் ஆகிய பாத்திரங்களை மாறிமாறி வகிப்பவை.
கடந்த 42 ஆண்டுகளாக, தொடர்ந்து இருமுனை போட்டிக்கான களமாகவே பராமரிக்கப்பட்டு வரும் தமிழகத்தில், இரண்டு பிரதான போட்டியாளர்களும் அரசியலில் நட்பு பாராட்டினால் நிலைமை என்னவாகும்? நிச்சயமாக, மூன்றாவதாக ஒருவர் வலிமைப் பெற்றுவிடுவார். அதன்மூலம், இருவருமே தமது பிரதான முக்கியத்துவத்தை நிச்சயம் இழப்பார்கள்.
ஆனால், கடந்த 42 ஆண்டுகளாக, உத்திரப்பிரதேச அரசியல் களத்தை ஆராய்ந்தால் தலை சுற்றிவிடும். கடந்த 4 தசாப்தங்களில் அங்கே போட்டிக்கான களங்கள் நிறைய மாற்றங்களை சந்தித்துள்ளன. அம்மாநிலத்தின் சூழலில், இருமுனைப் போட்டிகளை தொடர்ந்து தக்கவைப்பது எளிதுமல்ல. இதுபோன்றதொரு நிலையில், அங்கே பிரிந்தவர்கள் கூடுவதும், கூடியவர்கள் பிரிவதும் சகஜமே.
இந்தத் தேர்தலில் இணைந்திருக்கும் அகிலேஷும் மாயாவதியும், அடுத்த தேர்தலில் எதிரெதிர் களங்களில் நின்றால், அதில் ஆச்சர்யம் எதுவுமில்லை. மேற்குவங்கத்தில்கூட, பாரதீய ஜனதா பெரிதாக செல்வாக்குப் பெற்றால், மம்தா பானர்ஜி, எதிர்காலத்தில் கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணி சேரும் நிலையும் வரலாம்.
மறைந்த ஜெயலலிதா அடிக்கடி பயன்படுத்தும் வாசகமான “அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை – நிரந்தரப் பகைவனும் இல்லை” என்பதை ஏதோ, ஜெயலலிதா கண்டுபிடித்ததைப் போல் சிலர் சிலாகிக்கிறார்கள்.
இந்த நிரந்தர ‘நண்பர்’ மற்றும் ‘பகைவர்’ என்ற அடையாளங்களை அந்தந்த அரசியல் களங்கள்தான் தீர்மானிக்கின்றன. இருமுனை ஆட்டங்கள் வலுவாக இருக்கும் தமிழகத்தில், திமுக – அதிமுக என்ற கட்சிகள் 42 ஆண்டுகளாக நிரந்தர எதிரிகளே! அவர்கள் அரசியல்ரீதியாக முன்னெப்போதும் இணைந்திராதவர்கள். இணைய வேண்டிய தேவையும் இல்லாதவர்கள்!
ஆனால், அரசியல் களங்கள் குண்டக்க மண்டக்க மாறிக்கொண்டிருக்கும் உத்திரப்பிரதேசத்தில், நிரந்தர அரசியல் எதிரிகள் யாரும் இருக்க முடியாது!
– மதுரை மாயாண்டி