லண்டன்: ஐசிசி விதிமுறையை மீறிய காரணத்தால், இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் ஆட்டத்தை, சாதாரண பார்வையாளர் வரிசையில் அமர்ந்து கவனித்தார் இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா.

இந்தியா – இலங்கைப் போட்டியில் பார்வையாளர் வரிசையில் அமர்ந்து, முன்னாள் இலங்கை வீரர் ஜெயசூர்யா போட்டியைக் கவனித்துக் கொண்டிருந்தது பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்திருக்கும். ஏன், அவர் வீரர்கள் இருக்கும் பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று மனதில் கேள்வி எழுந்திருக்கலாம்!

இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் நடந்த நிதி மோசடிகளில் ஜெயசூர்யா பெயரும் அடிபட்டது. எனவே, ஐசிசி அமைப்பின் ஊழல் எதிர்ப்பு கோட்பாட்டின் அடிப்படையில் ஜெயசூர்யா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, கிரிக்கெட் தொடர்பான விஷயங்களில் அதிகாரப்பூர்வமாக ஈடுபடுவதற்கோ, சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் இடங்களில், வீரர்கள் இருக்கும் இடங்களுக்குள் வருவதற்கோ தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஒரு ரசிகர் என்ற முறையில் மைதானத்தில் அமர்ந்து போட்டியை ரசிப்பதற்கு எந்த தடையும் கிடையாது என்று கூறப்பட்டுள்ளது.