சென்னை: தமிழ்நாட்டிற்கு ஏன் கல்வி நிதி ஒதுக்கவில்லை?  என்பது குறித்து உயர்நீதிமன்றத்தில் மத்தியஅரசு விளக்கம் அளித்துள்ளது.

அதில், மத்தியஅரசு அறிவித்த  புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட மத்திய அரசி்ன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் தமிழ்நாடு அரசு  கையெழுத்திடவில்லை என்பதால் தமிழகத்துக்கான நிதியை ஒதுக்கவில்லை என  தெரிவித்துள்ளது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும்  கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் நடப்பாண்டுக்கான  மாணவர் சேர்க்கை இதுவரை தொடங்கப்படவில்லை . இதை சுட்டிக்காட்டி, கோவையை சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன்   அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த விசாரணையின்போது,  மத்தியஅரசு நிதி ஒதுக்காததை தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் சுட்டிக்காட்டியிருந்தார். இது கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,   கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டு இடங்களுக்காக தமிழகத்துக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதி விவரங்களை சமர்ப்பிக்கும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இதையடுத்து  இந்த வழக்கு நேற்று (மே 23ந்தேதி)  மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ‘‘புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான மத்திய அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடாத காரணத்தால் கட்டாயக் கல்வி சட்டத்தின்கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டுக்கான மத்திய அரசின் பங்களிப்பு தொகை ஒதுக்கப்படவில்லை. பல்வேறு மாநிலங்கள் இதுதொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில் தமிழக அரசு மட்டும் கையெழுத்திடவில்லை’’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ‘‘புதிய கல்விக் கொள்கை தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திடவில்லை என்பதால் நிதி தரமாட்டோம் என கூறுவது மத்திய அரசின் பெரியண்ணன் மனப்பான்மையை காட்டுகிறது’’ என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர். மேலும், கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் 25 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக வரும் மே 28-ம் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.