லக்னோ:

பிரதமர் மோடியின் விமானத்தை தேர்தல் அதிகாரி சோதனையிட்டதுபோல், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பயணித்த விமானத்தையும் அதிகாரி ஒருவர் சோதனையிட்ட சம்பவம் நடந்துள்ளது.


கடந்த மாதம் ஒடிசாவுக்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு தனி விமானத்தில் பிரதமர் மோடி வந்தார்.
அப்போது, தேர்தல் கண்காணிப்பாளர் முகமது மோஷின் பிரதமரின் விமானத்தை சோதனையிட்டார்.

சிறப்பு பாதுகாப்பு வளையத்தில் உள்ள பிரதமரின் விமானத்தை சோதனையிட்டது விதிமீறல் என்று கூறி, முகமது மோஷினை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்தது.

இதன்பின்னர் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். சஸ்பெண்ட் உத்தரவுக்கு தீர்ப்பாயம் தடை விதித்தது.

இதனையடுத்து, சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெற்ற தேர்தல் ஆணையம், கர்நாடக ஐஏஎஸ் அதிகாரியான முகமது மோஷின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.

இதே போன்ற சம்பவம் 1985-ம் ஆண்டும் நடந்துள்ளது.
உத்திரப்பிரதேசம் கோரக்பூரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி பங்கேற்றார்.

அப்போது அவரது விமானத்தை அப்போதைய போலீஸ் சூப்பிரண்டன்ட் ஏஎல்.பானர்ஜி சோதனையிட்டார். அதன்பின்னர், டிஜிபியாக பதவி வகித்து ஓய்வு பெற்றார்.

இது குறித்து ஏஎல்.பானர்ஜி கூறும்போது, கடந்த 1984-ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடந்தபோது, விஐபி பாதுகாப்பு மற்றும் சட்டம் – ஒழுங்கு பராமரிப்ப பணியில் ஈடுபட்டேன்.

ராஜீவ்காந்தி கோரக்பூருக்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்தபோது, அனைத்து வாகனங்களையும் சோதனை நடத்துவது என் பணியாக இருந்தது.

அப்போது ராஜீவ்காந்தி விமானத்தை சோதிக்க வேண்டும் என விமானப் படை அதிகாரியிடம் தெரிவித்தேன். கமாண்டரும் அனுமதி கொடுத்தார்.
நானும் விமானத்தை முழுவதும் சோதனையிட்டேன்.

நல்ல வேளையாக விமானத்தில் நான் எதையும் பார்க்கவில்லை. கேபினில் இருந்த பிரதமரின் இருக்கையிலும் அமர்ந்து பார்த்தேன்.
விமானத்தை முழுவதும் சோதனை செய்தேன் என்றார்.