சிட்னி: வேகப்பந்து வீச்சுக்கேற்ற ஆடுகளத்தில் ஒரு அணி விரைவாக ஆட்டமிழந்தால், அதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. ஆனால், சுழற்பந்து வீச்சு தாக்கம் செலுத்தினால் மட்டும், ஒவ்வொருவரும் கதற தொடங்குகிறார்கள் என்று பொட்டில் அடித்தாற்போல் விமர்சனம் செய்துள்ளார் ஆஸ்திரேலியாவின் பிரபல சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன்.
மாண்டி பனேசர் போன்ற முன்னாள் சுழற்பந்து வீச்சாளர்கள், ஸ்பின் ஆடுகளத்திற்கு எதிராக பேசிய நிலையில், நாதன் லயனின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
அவர் கூறியுள்ளதாவது, “உலகெங்கிலும் வேகப்பந்து வீச்சிற்கு ஒத்துழைக்கும் மைதானங்களில் நாம் ஆடிவருகிறோம். அத்தகைய மைதானங்களில், அணிகள் 47, 60 என்ற ரன்களுக்கெல்லாம் ஆட்டமிழந்துள்ளன. அப்போதெல்லாம் யாரும் ஆடுகளத்தின் தரம் பற்றி பேசுவதில்லை.
ஆனால், ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்க தொடங்கிவிட்டால் மட்டும், ஒவ்வொருவரும் கதறத் தொடங்கிவிடுகின்றனர். அகமதாபாத் போட்டியை நான் முழுவதும் பார்த்துக் கொண்டிருந்தேன். அது மிகவும் பிரதமாதமாக இருந்தது.
அகமதாபாத் ஆடுகளத்தை தயார் செய்தவரை, சிட்னிக்கு வரவழைத்து, இங்கும் அதுபோன்ற ஆடுகளத்தை ஏற்பாடு செய்ய கேட்டுக்கொள்ள வேண்டுமென்பது எனது ஆசை” என்றுள்ளார் லயன்.
ஆஸ்திரேலியாவில், அடிலெய்டு டெஸ்ட் போட்டியில்கூட, இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில், ஸீம் பந்துவீச்சிற்கு 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், அப்போது யாரும் குரல் கொடுக்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.