தபால் ஓட்டு விவகாரத்தில்: தேர்தல் ஆணையம் பின் வாங்கியது ஏன்?
ஆரம்பத்தில் ராணுவத்தினரும், தேர்தல் வேலையில் ஈடுபடும் ஊழியர்களும் மட்டுமே தபால் ஓட்டு அளிக்க வகை செய்யப்பட்டிருந்தது.
பின்னர் 85 வயது ஆனோர் தபால் ஓட்டளிக்க அனுமதி வழங்கப்பட்டது. டெல்லி சட்டசபைத் தேர்தலில் 85 வயதான முதியோர் தபால் மூலம் வாக்களித்தனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பீகார் மாநில சட்டசபைத் தேர்தலில் 65 வயது நிரம்பியோர் தபால் ஓட்டளிக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது.
தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் 65 வயதினர் தபால் ஓட்டளிக்கும் வகையில் சட்ட அமைச்சகம் தேர்தல் விதியில் திருத்தம் செய்தது.
65 வயது முதிர்ந்தவர்களுக்குத் தபால் மூலம் வாக்களிக்கும் திட்டத்தைச் செயல் படுத்துவது தொடர்பான ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
பீகாரில் 65 வயது நிரம்பிய வாக்காளர்கள் 72 லட்சம் பேர் உள்ளனர்.
இத்தனை பேருக்கும் தபால் ஓட்டு அளிப்பதில் உள்ள சிரமங்களை மனதில் வைத்தே ,’’அரசியல் கட்சிகள் எதிர்ப்பதால் பீகார் தேர்தலில் 65 வயது நிரம்பியோர் தபால் ஓட்டளிக்கும் முடிவைத் திரும்பப் பெறுகிறோம்’’ எனத் தேர்தல் ஆணையம் அறிவிக்க நேர்ந்தது.
-பா.பாரதி.