டில்லி:

”நான் சாதாரண மனிதன்” மரபுகள் பற்றி எனக்கு தெரியாது என்று கட்டிப்புடி ராஜதந்திரம் குறித்த விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.

உலக நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்கும் போது, தனிப்பட்ட முறையில் அவர்களை விமான நிலையம் வரை சென்று வரவேற்பதும், அவர்களை  கட்டிப்பிடித்து வரவேற்பு அளிப்பதையும்  வழக்கமாகக் கொண்டுள்ளார்.

மோடியின், இத்தகைய வரவேற்பை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கின்றன. சமூகவலைதளங்களிலும் இந்த விசயத்துக்காக்க மோடி கிண்டலடிக்கப்படுகிறார்.

சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, , மோடியின் கட்டிப்புடி ராஜதந்திரம் பலிக்கவில்லை என்று கிண்டலாக தெரிவித்திருந்தார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்திலும் மோடி, வெளிநாட்டு தலைவர்களை சந்திக்கும் போது ஏற்பட்ட நிகழ்வுகளை வைத்து விமர்சித்து ஒரு மீம்ஸ் வீடியோவும் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், ஆங்கில தனியார் தொலைக்காட்சி  பிரதமர் மோடி பேட்டி அளித்தபோது,   கட்டிப்பிடி ராஜதந்திரம் பற்றிய விமர்சனங்கள் குறித்து பேசினார்.

அப்போது, “ நான் ஒரு சாதாரண மனிதன்.  மரபுகள் பற்றி எனக்கு தெரியாது. பாதகமான சூழலை  சாதகமான வாய்ப்பாக மாற்றுவது எனது அடிப்படை இயல்பு. மற்றவரைப் போல நான் பயிற்சி பெற்றிருந்தால், நானும் உலக தலைவர்களை சந்திக்கும் போது கை குலுக்கி விட்டு நின்றிருப்பேன். ஆனால், நான் ஒரு சாதாரண மனிதன், எனது நாட்டுக்கு எந்த தீங்கும் ஏற்படாமல் இருப்பதை  உறுதி செய்யவே நான் முயற்சிக்கிறேன்” என்றார்.

மேலும், “எனது உடலின் ஒவ்வொரு அணுவும் நாட்டிற்கு கடன்பட்டுள்ளது. நாட்டு  மக்களுக்காக பணியாற்றுவதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளேன். ஒரு சாதாரண மனிதனின் கண்களில் அவரது திருப்தியை நான் காணும்போது எனக்குள் ஒரு புது உத்வேகம் பிறக்கிறது. ஆட்சியின் மீது மக்கள் விமர்சனங்களை வைக்கும் போது அதை குறையென எண்ண  முடியாது. மக்கள் வைக்கும்  விமர்சணங்களில் இருந்து குறைகளை உணர்ந்து அவற்றில் இருந்து நம்மை நாம் மேம்பட வேண்டும்”  என்று மோடி தெரிவித்தார்.