சென்னை :
விவசாயிகள் மசோதாவில் உள்ள சீர்திருத்தங்கள் விவசாயிகள் தங்கள் தயாரிப்புகளுக்கு சிறந்த விலையைப் பெற உதவும் என்று அரசாங்கம் கூறினாலும், விவசாய குழுக்கள் இந்த மாற்றங்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்து வருகின்றன.
இந்தியாவின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயத்தில் சீர்திருத்தம் என்ற பெயரில் இந்த ஆண்டு மே மாதம் விவசாயிகள் மசோதாவை மத்திய அரசு அறிவித்தது. விவசாய விளை பொருட்களை அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் இருந்து விலக்குவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளன.
அரசு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மற்றும் விவசாய விளைபொருள் சந்தை கமிட்டி போன்ற இடங்களை தவிர வெளிச்சந்தையிலும் விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்துகொள்ளலாம். மேலும், ஒப்பந்த அடிப்படையில் விவசாயம் செய்யவும் இந்த மசோதாவில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.
தங்களுக்கு பயன்தரக்கூடிய இத்தனை அம்சங்கள் இருந்த போதும் விவசாயிகள் ஏன் இந்த மசோதாவை எதிர்த்து போராடிவருகின்றனர் என்பது விவாதத்திற்கு உரியதாகவே உள்ளது.
விளை பொருட்களுக்கு உரிய விலை வழங்காத கமிட்டிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் ஆகியவற்றின் ஆதிக்கத்தை தகர்த்தெறிந்து தனியார் சந்தைகளில் நல்ல விலைக்கு விற்க வழிகிடைக்கும் என்ற கருத்து விவசாயிகளிடையே பரப்பப்படுகிறது.
கடந்த பத்தாண்டுகளில் பூச்சிக்கொல்லி, உரம், விதை போன்ற விவசாயம் சார்ந்த தொழில்களில் தனியார் முதலீடுகள் அதிகரித்த அதேவேளையில் இந்த பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது.
இதைவைத்துப் பார்க்கும்போது, தற்போது விவசாய விளை பொருட்களை வாங்க அதிகரித்து வரும் தனியார் நிறுவனங்களின் முதலீடுகள் விவசாயிகளுக்கு உரிய விலை வழங்குமா என்பது சந்தேகமே, இருந்த போதும், இது எந்தளவுக்கு சாத்தியம் என்பதை உடனடியாக கூறமுடியாது.
மேலும், தங்களின் முதலீடுகளை திரும்ப எடுக்கும் நோக்கில் செயல்படும் நிறுவனங்கள் விலை குறைவாக இருக்கும் நேரத்தில் கொள்முதல் செய்வது என்பது வாடிக்கையாக உள்ள நிலையில், விவசாயிகளை வேறு எவ்வாறு பிழிந்தெடுக்கும் என்பதும் தங்கள் பொருளுக்கான விலையை விவசாயிகள் நிர்ணயிக்க முடியுமா என்பதும் தெரியவில்லை.
இந்த மசோதாவிற்கு முன்பு விவசாயிகள் தனியாருக்கு தங்கள் பொருட்களை விற்கமுடியாத நிலை இருந்ததாக கூறுவது உண்மையல்ல. 2012-13 ம் ஆண்டு தேசிய புள்ளிவிவர ஆய்வின் படி பெரும்பான்மையான விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை தனியாருக்கு விற்பனை செய்வதாக கூறுகிறது.
31 வகையான விவசாய விளை பொருட்களை இந்த தனியார் நிறுவனங்கள் வாங்குகின்றன. அதேபோல், 2018 ம் ஆண்டு ரிசர்வ் வங்கி நடத்திய ஒரு ஆய்வில் 50 சதவீத விவசாயிகள் தங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதில்லை என்று கூறியிருந்தனர்.
தங்கள் பொருட்களை விற்பதற்கு விவசாயிகளுக்கு உதவியாக அகில இந்திய அளவில் பயன்படும் இ-நாம் என்ற இணையதளத்தை மோடி அரசு அறிமுகப்படுத்தியது, இந்த இணையதளத்தில் கூட குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதில்லை என்று கூறியிருந்தனர்.
பாஜக அரசின் இந்த மசோதா தொடர்பாக ஏற்பட்ட மோதலில் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அகாலிதள தலைவர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் “ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் எப்படி அனைவருக்கும் இலவச சிம் குறைந்த கட்டணம் என்று கூறி வாடிக்கையாளர்களைக் கவர்ந்து பின் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியதோ அதுபோல் விவசாயிகளும் வஞ்சிக்கப்படுவதுடன் விவசாயிகளின் வாழ்வு இந்த தனியார் நிறுவனங்களின் தயவில் தான் இருக்கும்” என்று கூறி தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது குறிப்பிடதக்கது.
விவசாயம் எனும் முதுகெலும்பில் சீர்திருத்தம் என்ற பெயரில் மாற்றம் ஏற்படுத்த நினைப்பது, உலக அரங்கில் இந்தியா நிமிர்ந்து நிற்குமா என்பது விவசாயிகள் மத்தியில் கேள்விக்குறியாய் வளைந்து நிற்கிறது.