தமிழ்நாட்டில் வடமாநில பாணியில் மத அரசியலை, ஏற்கனவே வேறு வழிகளில் முன்னெடுக்க முயற்சித்த பாரதீய ஜனதா, தற்போது வேல் யாத்திரை மூலம் முயற்சித்தது. ஆனால், அதற்கு உறுதியாக அனுமதி மறுத்துவிட்டது தமிழக அரசு.
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 14% உள்ள சிறுபான்மையினர் அரசியல்தான் உண்டே தவிர, இந்து மதத்தின் பெயரால் இதுவரை பெரும்பான்மை மத அரசியல் இருந்ததில்லை. ஆனால், அதற்கு பதிலாக தீவிர ஜாதி அரசியல் உண்டு.
தமிழக மக்கள் ஜாதிரீதியாக பிரிந்து நின்று வாக்களிப்பவர்கள். அதிமுக என்ற ஒரு கட்சி உருவானபோதே, இந்த ஜாதி அரசியல் வலுவடைந்தது. அதுவும், ஜெயலலிதாவிற்கு பிறகு மிகவும் வெளிப்படையாக மாறியது என்பர்.
இந்நிலையில், தமிழகத்தில் இந்து மத அரசியல் என்ற ஒன்றே இல்லாதபோது, அந்த விஷயத்தில், திமுக வம்பிழுத்து பாரதீய ஜனதாவினர் திட்டமிட்டு முன்வைக்கும் விமர்சனங்களுக்கு, திமுக எதற்காக பதற்றமடைந்து பதில் சொல்ல வேண்டும் என்கின்றனர் சில அரசியல் விமர்சகர்கள்!
எனவே, தேர்தல் நேரத்தில் மதம் தொடர்பாக பாரதீய ஜனதாவினர், வேண்டுமென்றே திமுகவை குறிவைத்து முன்வைக்கும் விமர்சனங்களை லேசாகப் புறந்தள்ளி, தமிழக தேர்தலில் எப்படியான செயல்பாடுகள் வாக்குகளைக் கொண்டுவரும் என்பதில், திமுக அதிக கவனம் செலுத்தினாலே போதும் என்பது அவர்களின் கருத்து!