இரண்டு மாதங்களுக்கும் மேலாக நாட்டின் ஒரு மாநிலத்தில் இன அழிப்பு முயற்சி நடைபெற்றுவரும் நிலையில் இது குறித்து பிரதமர் மோடி கண்திறந்து பார்க்காமல் மௌனமாக இருப்பது ஏன் ? என்றும் மணிப்பூர் பழங்குடியின பெண்களை சாலையில் நிர்வாணமாக இழுத்துச் சென்று கூட்டு கற்பழிப்பு செய்த கொடுமையை பார்த்தும் பிரதமருக்கு ஆவேசமோ கண்ணீரோ வராதது ஏன் ? என்றும் இந்திய மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் இன மோதலின் உச்சகட்டமாக பழங்குடியின பெண்கள் கற்பழிக்கப்பட்டது தொடர்பாக வெளியான வீடியோ நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கங்கோபி மாவட்டத்தில் இரண்டு குக்கி பழங்குடி இனப் பெண்களை நிர்வாணப்படுத்தி சாலையில் இழுத்துச் சென்ற கும்பல் அவர்களை மானபங்கப் படுத்தியதோடு மட்டுமல்லாமல் வயலில் தள்ளி வன்புணர்வு செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ நேற்று வெளியானதை அடுத்து மெய்தீய் தீவிரவாதிகள் மணிப்பூரில் அரங்கேற்றி வரும் வன்முறையின் வீரியம் தெரியவந்துள்ளது.
அம்மாநில முதல்வரிடம் கேள்வி எழுப்பப்பட்டதை அடுத்து இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருப்பதாக ஒற்றை விளக்கம் அளித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் இந்த இரண்டு பெண்களைத் தவிர மேலும் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டதாக பஹேனோம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஷைகுல் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள எப்.ஐ.ஆரில் 800 முதல் 1000 பேர் கொண்ட கும்பல் இந்த பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மணிப்பூரில் வன்முறை மூண்ட அடுத்த நாள் மே 4 ம் தேதி பிற்பகல் ஏ.கே. ரக துப்பாக்கிகள் மற்றும் நவீன துப்பாக்கிகள் ஆயுதங்களுடன் தங்கள் கிராமத்திற்குள் நுழைந்த மெய்தீய் சமூகத்தைச் சேர்ந்த வன்முறையாளர்களை பயந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிருக்கு பயந்து தப்பியோடியதாக அவர்கள் அளித்த புகாரில் கூறியுள்ளனர்.
தங்களை விடாமல் துரத்தி வந்த அந்த கும்பல் தங்களை பிடித்து தாக்கியதோடு 21 வயதுடைய தனது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண்ணின் தந்தை புகாரில் கூறியுள்ளார். மேலும், தனது மனைவி மற்றும் உறவினர் என இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி மானபங்கப் படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அடையாளம் தெரியாத கும்பல் வன்முறையில் ஈடுபட்டதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில் இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.
இருந்தபோதும் இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாகவும் யாரும் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் இல்லை.
இதனையடுத்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக நாட்டின் ஒரு மாநிலத்தில் இன அழிப்பு முயற்சி நடைபெற்றுவரும் நிலையில் இது குறித்து பிரதமர் மோடி கண்திறந்து பார்க்காமல் மௌனமாக இருப்பது குறித்து இந்திய மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.