கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் பிரையன் லாரா-வின் சாதனையை முறியடிக்க மனமில்லாததால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தை டிக்ளேர் செய்ததாக தென் ஆப்பிரிக்க கேப்டன் வியான் முல்டர் கூறியுள்ளார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளாயாட ஜிம்பாப்வே சென்றுள்ளது தென் ஆப்பிரிக்க அணி.

முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி புலவாயோ நகரில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் ஞாயிறு (6-7-2025) முதல் நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 626 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.

அணியின் கேப்டன் வியான் முல்டர் 367 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் துவக்கம் முதல் சிறப்பாக விளையாடிய வியான் முல்டர், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற பிரையன் லாரா-வின் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணி திடீரென டிக்ளேர் செய்தது குறித்து கூறிய வியான் முல்டர், “தென் ஆப்பிரிக்க அணி ஏற்கனவே தேவையான கூடுதல் ரன்களை எடுத்திருந்தது மற்றும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் லாரா-வின் சாதனையை முறியடிக்க மனமில்லை” என்றும் பதிலளித்துள்ளார்.

மேலும், மற்றொரு வாய்ப்பு வரும் போது லாரா-வின் சாதனையை அதே போன்று முறியடிப்பேன் என்று கூறியுள்ளார்.

மேற்கு இந்திய கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா 1994ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 375 ரன்கள் அடித்து அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.

இதனை பத்தாண்டுகள் கழித்து ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 380 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா வீரர் மாத்தியூ ஹேடன் முறியடித்தார்.

ஆனால், ஆறு மாதங்களிலேயே 2004ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 400 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த பிரையன் லாரா-வின் சாதனையே கிரிக்கெட் உலகில் இதுவரை அடித்த அதிகபட்ச ரன்களாக இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.