டில்லி:
இந்திய அரசு காஷ்மீரில் ஏன் பொது வாக்கெடுப்பு நடத்தவில்லை என, மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
காஷ்மீரில் வாழ்ந்து வரும் மக்களிடம், அவர்களுக்கு இந்தியா வேண்டுமா? இல்லை என்பதை ஏன் வாக்குகள் மூலம் மக்கள் கருத்தைக் கேட்கக்கூடாது என்றும் தெரிவித்து உள்ளார்.
கடந்த 14ந்தேதி ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்குச் செல்லும் நெடுஞ்சாலையுல் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா அருகில் சிஆர்பிஎப் வீரர்கள் 44 பேர் தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தனர்.
இந்த கொடூர குண்டுவெடிப்பை நடத்திய ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படை பயங்கரவாதி என்பது தெரியவந்தது.
இந்த விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரபலங்கள் என்றாலே பயங்கரவாதத்தை கண்டிக்க வேண்டும் என்று அவசியமில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை மணந்த இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் உலக நாயகன் என்று தன்னை கூறிக்கொண்டு புரியாத மொழி பேசும் நடிகர் கமல்ஹாசன், நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, இதுபோன்ற தாக்குதல்கள் காரணமாக ஏன் வீரர்கள் உயிரிழக்க வேண்டும்? நம் நாட்டின் பாதுகாவலர்கள் ஏன் இறக்க வேண்டும்? இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள அரசியல்வாதிகள் ஒழுங்காக நடந்துகொண்டால் எந்த வீரரும் உயிரிழக்க வேண்டிய அவசியமில்லை. எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி கட்டுப்பாடுடன் இருக்கும் என்று அதிரடியாக கருத்து தெரிவித்தார்.
மேலும், காஷ்மீரில் வாழ்ந்து வரும் மக்களிடம், அவர்களுக்கு இந்தியா வேண்டுமா? இல்லையா என்பது குறித்து அவர்களின் கருத்தை பொது வாக்கெடுப்பு மூலம் ஏன் இதுவரை நடத்தவில்லை என்றும், எதற்காக இந்திய அரசு பயப்படுகிறது?” கேள்வி எழுப்பி உள்ளார்.
கமல்ஹாசனின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.