டெல்லி: தலைநகர் டெல்லியில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரிக்க தொடங்கி உள்ளது, கவலைக்குரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.
டெல்லியில் நேற்று ஒரேநாளில் மட்டும் 7178 கொரோனா தொற்றுகள் உறுதியாகி உள்ளன. முன் எப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் அதிகமான தொற்று எண்ணிக்கை நேற்று தான் பதிவாகி உள்ளது. 24 மணி நேரத்தில் 64 பேர் பலியாகி உள்ளனர்.
கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு முதன்முறையாக நேற்றைய தினம் பாதிப்புகள் அதிகமாகி இருக்கின்றன என்று சுகாதாரத்துறை சுட்டிக் காட்டி உள்ளது. நகரின் முக்கிய மருத்துவமனைகள் உள்பட அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா நோயாளிகளினால் நிரம்பி வழிகின்றன.
ஐசியூ படுக்கைகளில் கிட்டத்தட்ட 73.5 சதவீதம் நிரம்பி உள்ளன. இந்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் டெல்லியில் கொரோனா பரவல் மீண்டும் உச்சக்கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது என்பதை காட்டுவதாக உள்ளது என்கின்றனர் சுகாதாரத்துறை நிபுணர்கள்.
இந்த புதிய தொற்றுகள் அனைத்தும் வடக்கு, மத்திய, வடகிழக்கு மற்றும் வடமேற்கு மற்றும் தென்கிழக்கு ஆகிய 6 மாவட்டங்களில் இருந்து தான் பதிவாகி இருக்கின்றன. 12 முதல் 14 சதவிதம் வரை கொரோனா தொற்று விகிதம் பதிவாகி உள்ளது.
டெல்லியில் உயரும் கொரோனா பாதிப்பின் நிலைமையை கண்ட சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன், ஆர்டிபிசிஆர் சோதனைகளை அதிகரிக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். தற்போது தீபாவளி நேரம் நெருங்கிவிட்ட படியால், மோசமான காற்றின் தரம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், ஆகவே இணை நோய் உள்ளவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர் என்றும சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.