கொரோனா வைரஸ் பேயாட்டம் ஆடிவரும் நிலையில், வர்த்தக நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு தனியார் நிறுவனங்கள், தங்களின் நிதி நிலைமைகளைப் பாதுகாக்க வேண்டி, பலவாறான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
- ஊழியர்களின் ஊதியத்தை குறைத்தல்
- புதிய பணிநியமனம் எதையும் மேற்கொள்ளாது இருத்தல்
- ஊதிய உயர்வை நிறுத்தி வைத்தல்
- வெளியில் பலருக்கு கொடுக்க வேண்டிய நிதியை நிறுத்தி வைத்தல்
- வியாபாரிகளுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை நிறுத்தி வைத்தல்
- ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் கீழ்மட்ட தொழிலாளர்களுக்கான ஊதியத்தை நிறுத்தி வைத்தல்
- ஊழியர்களை பணிநீக்கம் செய்தல்
உள்ளிட்ட பல்வேறான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்பது பொதுவான புரிதல். சிறிய நிறுவனங்களுக்கு உண்மையிலேயே பல சிக்கல்கள் இருக்கலாம். வணிக நடவடிக்கைகள் எதுவுமே நடக்காமல் முடங்கியுள்ள நேரத்தில், மூல ஆதார நிதியை எடுத்து செலவழித்தால், அதன்பிறகு அந்நிறுவனங்களின் இருப்பே கேள்விக்குறியாகி விடலாம்தான்.
ஆனால், நூற்றுக்கணக்கான கோடிகள் மற்றும் ஆயிரக்கணக்கான கோடிகள் என்ற வகையில் பணம் புரளும் நிறுவனங்கள்கூட, மேற்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. அவைகள், ஊழியர்களின் வயிற்றில் அடிப்பதற்கு பல காரணங்களை அடுக்குகின்றன.
ஆனால், ஊழியர்கள் விஷயத்தில் இப்படி கணக்குச் சொல்லும் நிறுவனங்கள் பல, கொரோனா தடுப்பு நிதி என்று அரசின் பெயரில் தொடங்கப்பட்டு, பின்னர் அது தனியார் தொண்டு அமைப்பு என்று நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்ட ‘பிஎம் கேர்ஸ்’ என்ற அமைப்பிற்கு தங்களால் இயன்ற அளவிற்கு தாராளமாக நிதி வழங்கியுள்ளன.
ஏன் இந்த பாரபட்சம்? என்ற கேள்விக்கு எளிமையான பதில் சொல்லப்படுகிறது. எப்போதுமே திறந்தவெளி சந்தை என்பது தனது உள்ளார்ந்த ஆற்றலை நம்பி செயல்படுவதில்லை. மாறாக, ஆட்சியில் இருப்பவர்களை நம்பியே செயல்படுகிறது.
ஆட்சியில் ஒருவர் இருந்தாலும், இத்தகைய பெரிய நிறுவனங்கள் பல வகைகளிலும் ஆதிக்கம் செலுத்தும். அதேசமயம், முடிந்தவரையில், ஆட்சியில் இருப்பவர்களை எதிர்த்து கருத்து கூறுவதையோ அல்லது செயல்படுவதையோ தவிர்த்துவிடும்.
எனவேதான், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் கடைமட்ட ஊழியர்களின் சம்பளத்தைக்கூட நிறுத்திவைத்த நிறுவனங்கள், ‘பிஎம் கேர்ஸ்’ திட்டத்திற்கு தாராளமாக நிதி வழங்கியுள்ளன.