மும்பை: ரூபாய் தாள்களின் வடிவம் மற்றும் அம்சங்களை, குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டிய தேவை என்ன? என்று இந்திய ரிசர்வ் வங்கியிடம் கேள்வி எழுப்பியுள்ளது மும்பை உயர்நீதிமன்றம்.
தேசிய கண்பார்வையற்றோர் அமைப்பு(என்ஏபி) இதுதொடர்பாக தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வாக்குமூலம் ஒன்றை தாக்கல் செய்யுமாறு ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது.
“ரூபாய் தாள்களில் உள்ள அம்சங்களையும், ரூபாய் தாள்களின் வடிவங்களையும் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை மாற்றியாக வேண்டிய கட்டாயம் என்ன? கள்ளப் பணத்தை ஒழிப்பதற்காக என்று காரணம் கூறுகிறீர்கள்.
ஆனால், அந்த பதிலை நாங்கள் சந்தேகிக்கிறோம். ஏனெனில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, பாகிஸ்தானால் ரூ.10000 கோடி பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்ற குற்றச்சாட்டு பொய்யாகிப் போனது” என்று கூறியுள்ளது நீதிமன்றம்.
பார்வையற்றோர் ரூபாய் தாள்களை எளிதில் அடையாளம் கண்டு வேறுபடுத்தும் விதத்தில், அதில் சிறப்பம்சங்களை சேர்ப்பது குறித்து முடிவு செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.