டில்லி:

ம்மு-காஷ்மீரில் குடியரசுத்தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கும் மசோதாவிற்கு காங்கிரஸ்  உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

ஜம்மு-காஷ்மீரில் மக்களவை தேர்தலை நடத்த முடியும் என்றால் சட்டமன்ற தேர்தலை ஏன் நடத்த முடியாது? என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.

கடந்த ஏப்ரல், மே மாதம் நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் நடைபெற்றபோது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் மக்களவைக்கான தேர்தல் சுமூகமாக நடைபெற்று முடிந்தது. ஆனால், அங்கு சட்டமன்ற தேர்தலை நடத்த மத்தியஅரசும், தேர்தல் ஆணையமும் முயற்சிக்காமல், மேலும் குடியரசு தலைவர் ஆட்சி நீட்டிக்கப்பட்டு வருகின்றன.

காஷ்மீரில் மெஹ்பூபா முப்தி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கடந்த ஆண்டு (2018) ஜூன் மாதத்தில் பாஜக விலக்கிக் கொண்டதையடுத்து அங்கு குடியரசு தலைவர் ஆட்சி நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது. அது கடந்த டிசம்பர் மாதம் முடிவடைய இருந்த நிலையில், கவர்னரின் அறிக்கையை தொடர்ந்து மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது. தற்போது அங்கு குடியரசு தலைவர் ஆட்சி   ஜூலை மாதம் 3-ம் தேதி முடிவுக்கு வருகிறது.

இந்த நிலையில், மேலும் 6 மாதங்களுக்கு ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிக்க ஆளுநர் சத்யபால் மாலிக் மத்திய அமைச்சரவைக்குப் பரிந்துரைத்தார். அவரின் பரிந்துரையை ஏற்று, குடியரசுத் தலைவர் ஆட்சிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

ஜம்மு காஷ்மீரைப் பொறுத்தவரை ஓராண்டுக்கு மேல் குடியரசு தலைவர் ஆட்சி நீட்டிக்க வேண்டுமானால், அந்த சட்ட திருத்தத்துக்கு பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும் என்பது விதி. அதைத்தொடர்ந்தே அமித்ஷா, அங்கு குடியரசு ஆட்சியை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க மசோதா தாக்கல் செய்தார்.

ஆனால், இந்த மசோதாவுக்கு   எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அங்கு கடந்த மாதம் லோக்சபா தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்ற நிலையில், சட்டமன்ற தேர்தலை நடத்துவதில் என்ன சிக்கல் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். ஜம்மு காஷ்மீரில் மேலும் குடியரசு தலைவர் ஆட்சியை நீட்டிக்கக்கூடாது என்றும், உடனே சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதன் காரணமாக லோக்சபா பரபரப்பாக காணப்பட்டது.