பா.ஜ.கவின் கோட்டையாக கருதப்படும் குஜராத்துக்கு முன்னதாகவே தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
ஹிர்திக் படேல் தலைமையிலான படேல் மக்களின் போராட்டமும், உனா நகரில் பசுவதையை காரணம் காட்டி தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலையடுத்து தலித் மக்கள் வெகுண்டெழுந்து நடத்திய மாபெரும் போராட்டம் ஆகியவை குஜராத்தில் பா.ஜகவின் அஸ்திபாரத்தை ஆட்டியிருக்கின்றன.
பிரதமர் நரேந்திரமோடி பிரதமராகி டெல்லி சென்றதற்குப் பின் குஜராத்தில் தலைமையேற்ற ஆனந்திபென் மற்றும் விஜய் ருபானி இரு முதல்வர்களுமே மோடி அளவுக்கு திறம்பட செயல்படாதது பா.ஜ.கவுக்கு ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது. இரு முதல்வர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் ஒருபக்கம் வீசப்படுகின்றன.
இன்னொரு பக்கம் சூரத் நகரின் வைர வியாபாரமும், டெக்ஸ்டைல் வியாபாரமும் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்து இருக்கின்றன. வைர வியாபாரம் கடந்த ஆறு மாதங்களில் 20-25 சதவிகிதம் சறுக்கியிருக்கிறது. டெக்ஸ்டைல் பொருட்கள் தயாரிப்பு 40-45 சதவிகிதம் சரிந்திருக்கிறது. டெக்ஸ்டைல் துறையின் வீழ்ச்சிக்குக் காரணம் சீனத் தயாரிப்புகளின் ஊடுறுவல் காரணமாகும். இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஸ்மிதி இராணியிடம் வைக்கப்பட்ட மனுக்கள் மீது அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் டெக்ஸ்டைல் வியாபாரிகள் பா.ஜ.அக அரசு மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள்.
குஜராத் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட இன்னொரு காரணம் குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சி. இளைஞர்கள், படேல் இனமக்கள், தலித் மக்கள், மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர் ஆகிய அத்தனை பேரின் ஆதரவும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பெருகி வருகிறது. அவர் சூரத் நகரில் நடத்திக் காட்டிய பேரணியும் கூட்டிய கூட்டமும் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் குலைநடுக்கத்தைக் கொடுத்து விட்டது.
பஞ்சாப் மற்றும் கோவாவில் நடைபெறும் சட்ட மன்ற தேர்தல்களில் இம்முறை ஆம் ஆத்மியின் வெற்றி உறுதி. அதற்குப் பின்னர் குஜராத் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் ஆம் ஆத்மி அலை குஜராத்தில் மிக வலிமையாக வீசக்கூடும் என்ற பயத்தில்தான் மத்திய அரசு குஜராத் சட்ட மன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்த தீர்மானித்திருக்கிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் சஞ்சய்சிங் கூறியிருக்கிறார்.
இவரது கூற்றை மறுக்கும் பா.ஜ.க, பிரதமர் மோடியின் கனவு ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதுதான். இது அவரது மாநிலமான குஜராத்திலிருந்தே ஆரம்பிக்கப்ப்டுகிறது அவ்வளவுதான் என்கிறது பா.ஜ.க தரப்பு.