புனே: இந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மிகுந்த முக்கியத்துவம் பெற்ற தலைவராக விளங்குகிறார்.

சோனியா காந்தியின் குடும்பத்திற்கு அடுத்து, பாரதீய ஜனதாவால் குறிவைக்கப்படும் நபராக திகழ்கிறார் சரத்பவார்.

அவரின் சொந்த தொகுதியான பாரமதி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அவரின் மகள் சுப்ரியா சுலேவை வீழ்த்த வேண்டுமென பாரதீய ஜனதா கங்கணம் கட்டி வேலைசெய்தது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தியின் தலைமையிலான காங்கிரஸ் கட்சி, பல மாநிலங்களில் வெற்றிகரமான முறையில் கூட்டணி அமைத்திருப்பதும், சில மாநிலங்களில் கூட்டணி அமையாவிட்டாலும், எதிர்க்கட்சிகளின் கூட்டணியை மதித்து நடந்துகொள்வதும் சரத்பவாரின் அறிவுறுத்தலில்தான்.

மேலும், பல அரசியல் தலைவர்களுடன் வேறுபாடுகளைத் தாண்டி நட்பு பாராட்டி வருபவர் சரத்பவார். எனவே, இவரின் இந்த நட்புவட்டம், தேர்தல் முடிந்து ஆட்சியமைக்கும் சமயத்தில், மோடிக்கு சிக்கலை உருவாக்கலாம்.

இவரின் சாமர்த்தியத்தால்தான், தற்போது மராட்டிய மாநிலத்தில் ராஜ்தாக்கரே, பாரதீய ஜனதாவை எதிர்த்து, கடுமையான பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இவர், பல்வேறு எதிர்க்கட்சிகளையும் எளிதாக ஒன்றிணைக்கும் திறன்பெற்றவர். எனவே, இவரின் சொந்த தொகுதியான பாரமதியில், இவரின் மகளை தோற்கடிக்க வேண்டுமென்பதில் பாரதீய ஜனதா அதிக அக்கறை காட்டியது.

அத்தொகுதியைப் பொறுத்தவரை, கடந்த 52 ஆண்டுகளாக, சரத்பவார் அல்லது அவர் கைகாட்டிய நபர்கள்தான் தொடர்ச்சியாக வென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

– மதுரை மாயாண்டி