சென்னை: தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.1000 கோடி முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணையில்,  திரைப்பட தயாரிப்பாளர்  ஆகாஷ் பாஸ்கர்,  தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனிடம் ஏன் விசாரணை என்பது குறித்து  இடி பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

டாஸ்மாக்கில் நடத்தப்பட்ட ரெய்டு விவகாரத்தில்,   “எதன் அடிப்படையில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரிடம் விசாரிக்க முடிவு எடுக்கப்பட்டது?  என்பது குறித்தும்,  விக்ரமின் வீடு, அலுவலகத்திற்கு சீல் வைப்பதற்கு ED-க்கு என்ன அதிகாரம் இருக்கிறது ?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

‘சோதனை நடத்த சென்ற போது வீடு மற்றும் அலுவலகம் பூட்டியிருந்ததால் அதன் காரணமாக சீல் வைக்கப்பட்டது’ அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட்டு உள்ளது.

டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை நடத்திய ரெய்டில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ள அமலாக்கத்துறை, தொடர்ந்து, டாஸ்மாக் நிறுவன தலைவர் விசாகன் ஐஏஎஸ் உள்பட பலரது வீடுகளில் அதிரடி ரெய்டு நடத்தியது. இதில் கிடைக்கபெற்ற ஆவணங்களைக்கொண்டு, தொழிலதிபர், திரைப்பட தயாரிப்பாளர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தியது.

அதாவது, கடந்த மே மாதம்,  டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் விசாகனின் இல்லத்தில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவரதுவீடு அருகே இருந்து ஏராளமான கிழிக்கப்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அதை ஆய்வு செய்த அமலாக்கத்துறையினர், அதைக்கொண்டு மேலும் சிலரிடம் விசாரணை நடத்தினார்.

அத்துடன்,  . தேனாம்பேட்டை கே.பி. தாசன் சாலையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் வீட்டிலும்,.  தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் வீட்டிலும் சோதனை நடத்தினர். இதுகுறித்து தகவல்அறிந்த ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாகினார். இதன்பின் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் வீடு மற்றும் அலுவலகம் ஆகியவற்றுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தொடர்ந்து அமலாக்கத்துறை தரப்பில் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனால் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோர் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இந்த நிலையில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் தரப்பில் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அதிகாரிகள் வைத்த சீலினை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

விசாரணையின்போது, டாஸ்மாக் முறைகேடுக்கும், ஆகாஷ் பாஸ்கரனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் ஒரு சினிமா தயாரிப்பாளர். அவரின் செல்ஃபோன்கள் மற்றும் ஒரு லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

தொடர்ந்து விக்ரம் ரவீந்திரன் தரப்பில் ஆஜாரான வழக்கறிஞர், விக்ரம் ரவீந்திரன் டாஸ்மாக் ஊழியர் இல்லை. சீல் வைக்க அதிகாரம் இருக்கிறதா? ஆனாலும் அவரது வீடு, அலுவலகங்களில் சீல் வைக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

இதன்பின் நீதிபதிகள் தரப்பில், எதன் அடிப்படையில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனிடம் விசாரிக்க முடிவு எடுக்கப்பட்டது? விக்ரம் ரவீந்திரன் வீடு, அலுவலகங்கள் எதன் அடிப்படையில் சீல் வைக்கப்பட்டது?

அமலாக்கத்துறை சோதனை நடத்தலாம், ஆவணங்களை கைப்பற்றலாம். சீல் வைப்பதற்கு என்ன அதிகாரம் இருக்கிறது?
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் குறிப்பிட்ட இருவரும் தலைமறைவானதால்,  அவரது வீடுகள் மூடப்பட்டு இருந்ததால், அதற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர் என தெரிவித்தனர்.

இதையடுத்து மனு குறித்து பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ், திமுக ஆட்சியாளரின் பினாமி என்று கூறப்படுகிறது. திடீர் பணக்காரரான இவர்,   தனுஷின் ‘இட்லி கடை’, சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’, அதர்வா முரளி நடிக்கும் ‘இதயம் முரளி’ ஆகிய படங்களை தனது ‘டான் பிக்சர்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இதில் இதயம் முரளி படத்தை இயக்கவும் செய்கிறார். இந்த படங்கள் மட்டுமல்லாது சிம்புவின் 49வது படத்தையும் தயாரிக்கிறார்.

 

இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் தனது குடும்பத்தோடு வந்து மணமக்களை வாழ்த்தினார். மேலும் பல்வேறு முன்னணி திரை பிரபலங்கள் நேரில் வந்து வாழ்த்தியிருந்தனர்.

ஆகாஷ் பாஸ்கரனின் மனைவி தாரணி ‘கவின்கேர்’ குழுமத்தின் நிறுவனர் சி.கே.ரங்கநாதனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. கவின்கேர் நிறுவனம், திமுக எம்.பி. கனிமொழி பங்குதாரராக உள்ள நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.