பிரதமர் நரேந்திர மோடிக்குப் பின் அந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளது யார் என்பது குறித்த ஊகங்களை நிராகரித்த மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், பிரதமர் மோடி இன்னும் பல ஆண்டுகள் நாட்டை வழிநடத்துவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாக்பூரில் உள்ள ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) தலைமையகத்திற்கு 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்து பேசினார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த சிவசேனா (யுபிடி) தலைவர் சஞ்சய் ராவத், “பாஜக தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெறுகிறார்கள்.” இந்த ஆண்டு செப்டம்பரில் மோடிக்கு 75 வயது ஆகிறது. இந்த சூழலில், தனது ஓய்வு குறித்து விவாதிக்க மோடி ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு வந்திருக்கலாம்” என்று கூறினார்.

சஞ்சய் ராவத்தின் அறிக்கைக்கு பதிலளித்த ஃபட்னாவிஸ், “2029 இல் மோடியை மீண்டும் பிரதமராகப் பார்ப்போம்” என்றார்.

“மோடியின் வாரிசைத் தேட வேண்டிய அவசியமில்லை. மோடி தீவிரமாக இருக்கும்போது, ​​வாரிசு பற்றி விவாதிப்பது இந்திய கலாச்சாரத்தில் பொருத்தமற்றது” என்று ஃபட்னாவிஸ் பதிலளித்தார்.

மேலும், “நமது கலாச்சாரத்தில், தந்தை உயிருடன் இருக்கும்போது பரம்பரை பற்றிப் பேசுவது பொருத்தமற்றது. இதுபோன்ற விஷயங்களைப் பற்றி நாம் தொடர்ந்து விவாதித்தால், அது முகலாய கலாச்சாரமாக மாறிவிடும் என்றும் இது தேவையில்லா ஆணி” என்றும் ஃபட்னாவிஸ் கூறியுள்ளார்.