புதுடெல்லி: பாரம்பரிய மருந்துகளுக்கான ஒரு உலகளாவிய மையத்தை இந்தியாவில் அமைப்போம் என்று தெரிவித்துள்ளது உலக சுகாதார நிறுவனம்(WHO).
உலக சுகாதார நிறுவனம் அமைக்கும் இந்த மையம், உலகளாவிய நலனுக்கான மையமாக மாறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தியா, உலகின் மருந்து நிலையமாக மாறும் என்று சமீபத்தில் நம்பிக்கை தெரிவித்திருந்தார் பிரதமர் மோடி.
ஐந்தாவது ஆயுர்வேதா நாளையொட்டி, ஜெய்ப்பூர் மற்றும் ஜாம்நகர், தலா ஒரு ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனங்களை அமைப்பதற்கான துவக்கத்தை பிரதமர் மோடி அறிவித்ததையடுத்து, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் ஆதனோம்.
ஐடிஆர்ஏ எனப்படும் த இன்ஸ்டிட்யூட் ஆஃப் டீச்சிங் அன்ட் ரிசர்ச் இன் ஆயுர்வேதா என்ற நிறுவனம் குஜராத்தின் ஜாம்நகரிலும், என்ஐஏ எனப்படும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆயுர்வேதா என்ற நிறுவனம் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரிலும் அமையவுள்ளது.
ஜாம்நகர் ஆராய்ச்சி நிறுவனம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாகவும், ஜெய்ப்பூர் நிறுவனம், நிகர்நிலைப் பல்கலைக்கழகமாகவும் இந்திய நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.