டில்லி,
இரட்டை இலை தொடர்பான விசாரணை இன்று பிற்பகலில் நடைபெற உள்ள நிலையில், தமிழக அமைச்சர்கள் மற்றும் டிடிவி அணியின் எம்எல்ஏக்கள் தலைநகர் டில்லியில் முகாமிட்டு உள்ளனர்.
இந்நிலையில், இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையில், தன்னையும் ஒரு வாதியாக சேர்க்கக்கோரி ஏ.கே.ஜோசப் என்பவர் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுக உடைந்ததால், அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்ன மான இரட்டை இலை முடக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஆர்.கே.நகர் தேர்தலின்போது, ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் தாங்கள் தான் உண்மையான அதிமுக, தங்களுக்கே இரட்டை இலை ஒதுக்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை வைத்தனர்.
ஆனால், தேர்தல் கமிஷன் இரட்டை இலையை யாருக்கும் ஒதுக்காமல் முடக்கி வைத்தது. அதைத்தொடர்ந்து இரு அணிகளும் தாங்கள்தான் உண்மையான அதிமுக என பிரம்மான பத்திரங்கள் தாக்கல் செய்தன.
இந்நிலையில், சமீபத்தில் இரு அணிகளும் ஒன்றாக இணைந்தது. அதைத்தொடர்ந்து அதிமுக செயற்குழு பொதுக்குழு கூடியது. அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்படி, சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழு தீர்மானம் குறித்து தேர்தல் கமிஷனிடம் விளக்கி அதற்கான ஆதாரங்கள், வீடியோக்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதற்கிடையில் டிடிவி தரப்பு மேலும் காலஅவகாசம் கேட்டு மனு கொடுத்தனர்.
அதன் காரணமாக இன்று (16/10/17) விசாரணை நடைபெற்றும் தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதைத்தொடர்ந்து இன்று பிற்பகலில் நடைபெற இருக்கும் விசாரணையில் கலந்துகொள்ள அமைச்சர்கள் சி.வி.சண்முகம், உதயகுமார், எம்.எல்.ஏ. ரவி ஆகியோர் டில்லி சென்றுள்ளனர். அங்கு அவர்கள் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் டிடிவி தரப்பு சார்பாக தங்கதமிழ்செல்வன் தலைமையில் ஒருசில எம்எல்ஏக்களும் டில்லியில் முகாமிட்டு உள்ளனர். அவர்கள் இன்று மாலை நடைபெறும் விசாரணையின்போது மேலும் கால அவகாசம் கேட்பார்கள் என கூறப்படுகிறது.
இன்றைய விசாரணையின்போது தேர்தல் கமிஷன் இறுதி முடிவு எடுத்து அறிவிக்குமா அல்லது டிடிவி தரப்புக்கு கால அவகாசம் கொடுத்து விசாரணையை மேலும் இழுத்தடிக்குமா என்பது இன்று மாலை தெரியவரும்.
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால், அதற்குள் இரட்டை இலையை மீட்க எடப்பாடி தலைமையிலான அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது சம்பந்தமாக மத்திய அமைச்சர்கள் சிலரையும் தமிழக அமைச்சர்கள் சந்தித்து வற்புறுத்துவார்கள் என கூறப்படுகிறது.