சென்னை,
அதிமுகவில் இருந்து என்னை நீக்க காரணம் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் டிஜிபி என்று டிடிவி தினகரன் கூறினார்.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டு கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று 3வது நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரன், எம்எல்ஏக்களுக்கு சம்பள உயர்வு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் அதிமுகவில் இருந்து ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்டதற்கு காரணம் யார் என்ற பகிர் தகவல்களை தெரிவித்தார்.
முன்னதாக சட்டசபையில் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ், சசிகலா குடும்பம் குறித்தும், அரசுக்கு உள்ள பெரும்பான்மை குறித்தும் பேசினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிடிவி தினகரன் பேச முற்பட்டார். ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதையடுத்து, ஓபிஎஸ், அமைச்ச்ர தங்கமணி, டிடிவி தினகரன் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.
ஆனால், அந்த விவாதத்தை சபை குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகர் உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிடிவி தினகரன் வெளிநடப்பு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினரகன், சார் சார்ன்னு பேசுனவர் தான் பன்னீர், எங்கள் குடும்பத்தால் தான் அவர் முதலமைச்சர் சீட்டில் உட்காந்தார் என கூறினார்.
மேலும் சட்டப்பேரவையில் பேச விடாமல் தடுக்கின்றனர் என்று குற்றம்சாட்டிய டிடிவி, முதல்வர் பதவி இல்லை என்பதற்காக தியானம் செய்தவர் ஓபிஎஸ் என்று கடுமையாக விமர்சித்தவர், குடும்ப ஆட்சிக்கு எதிராக போராடுவதாக கூறி வரும் அவர் குடும்ப அரசியல் செய்யவில்லையா, ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி, மகன் மற்றும் மாமனார் ஆகியோர் என்ன செய்கின்றனர் என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தங்கமணிதான் சசிகலாவிடம் தன்னை துணை பொதுச்செய லாளராக பரிந்துரைத்தார் என்றும், தான் அதிமுகவில் இருந்து வெளியேற காரணமாக இருந்து எனக்கு எதிராக சதி செய்த சதிக்காரர்கள் ஓபிஎஸ், தங்கமணி மற்றும் டிஜிபி ராமானுஜம் ஆகியோர்தான் என்ற பகிர் தகவலை தெரிவித்தார்.
இவர்கள் எங்களிடம் பதவியை வாங்கிக்கொண்டு ஜெயலலிதாவிடம், எங்களைப் பற்றி பொய் சொல்லி விடுவார்கள் என்ற தினகரன், ஒரே பொய்யை 10 பேர் தொடர்ந்து சொல்வதால் அதனை நம்பி ஜெயலலிதா வும் எங்களை நீக்கினார் என்றும் அவர் தெரிவித்தார்.
எங்களின் குடும்பத்தால் தான் ஓபிஎஸ் முதல்வரானார் என்றும் நான்தான் ஓபிஎஸை ஜெயலலிதாவுக்கு அறிமுகம் செய்து வைத்தேன் என்றவர்.. எங்கள் குடும்பம் இல்லாவிட்டால் ஓபிஎஸ் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது என்றும் தினகரன் அதிரடியாக கூறினார்.
நாங்கள் கட்சியில் இருந்தால் தவறு செய்ய முடியாது என்பதால் எங்களுக்கு எதிராக அவர்கள் சதி செய்த தாகவும் யாருக்கோ விசுவாசத்தை காட்ட ஓ.பன்னீர்செல்வம் குடும்ப ஆட்சிக்கு எதிராக செயல்படுவதாக கூறிவருகிறார் என்றும் கூறிய அவர், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவதை எதிர்த்தவர் செம்மலை என்றும், எடப்பாடியின் ஆட்சி ஊழலாட்சி என்று பேசிய ஓபிஎஸ் பதவிக்கொடுத்ததும் பங்காளிகள் என்றாகிவிட்டனர்.
குறுக்கு வழியில் கட்சியின் சின்னத்தையும் கட்சியையும் பெற்றும் ஆர்கே நகரில் அவர்கள் காலியாகிவிட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.